சென்னை: விருதுநகரில் ரூ.1,894 கோடியில் ஜவுளிப் பூங்கா அமைக்கும், மத்திய அரசின் பிரதமர் மித்ரா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் திட்டத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது.

விருதுநகரில் ரூ.1,894 கோடியில் ஜவுளிப் பூங்கா அமைப்பது தொடர்பாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்குடன் தமிழ்நாடு அமைச்சர், அதிகாரிகள் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் திட்டத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசு எடுத்த தொடர் முயற்சி வெற்றி அடைந்துள்ளது. 1,052 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் ஜவுளிப் பூங்கா மூலம் ரூ.10,000 கோடி முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்படும் ஜவுளிப் பூங்கா மூலம் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். ஜவுளிப் பூங்காவுக்காக 13 லட்சம் சதுர அடியில் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன. 2026 செப்டம்பருக்குள் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிக்கப்படும். ஜவுளி பூங்காவில் பணியாற்றவுள்ள தொழிலாளர்களுக்காக 10,000 படுக்கைகள் வசதி கொண்ட விடுதி அமைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் டிஆர்பி ராஜாவின் பதிவில், மாண்புமிகு அமைச்சர் கிரிராஜ் சிங் அவர்கள் மற்றும் அவரது அற்புதமான அதிகாரிகள் குழு, தமிழ்நாடு விருதுநகரில் #PMMITRAPARK ரூ. 1,894 கோடியில் அமைக்க ஒப்புதல் வழங்கி உள்ளது.
🏢 13 லட்சம் சதுர அடி #PlugAndPlay & #BTS இடம்
📍 1,052 ஏக்கரில் ஜவுளி பூங்கா
🏠 10,000 படுக்கைகள் கொண்ட #பாதுகாப்பான பணியாளர் தங்குமிடம்
🎯 நிறைவு: செப்டம்பர் 2026
📈 இலக்கு: ₹10,000 கோடி முதலீடு
💰 1 லட்சம் வேலைகள்
#தொழில்நுட்ப ஜவுளித் துறையில் உலகத் தலைவராக தமிழகத்தைப் பார்க்கும் எங்கள் கனவு விரைவில் நனவாகும்.
இந்தத் திட்டத்திற்கு விதைகளை விதைத்த என் அன்புக்குரிய அண்ணா அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மாநில நலன்களைப் பேணுவது குறித்த எங்கள் குறிப்பிட்ட கோரிக்கைகளை கவனமாகக் கேட்டு இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்த மத்திய அமைச்சர்
@girirajsinghbjp avargal அவர்களுக்கும் எனது சிறப்பு நன்றிகள்🙏🏾
தமிழ்நாடு ஏற்கனவே இந்தியாவின் முன்னணி ஜவுளி ஏற்றுமதியாளராக உள்ளது, இப்போது நாம் பெரியதாகவும் சிறப்பாகவும் வளரப் போகிறோம்! என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மித்ரா திட்டம் என்பது, ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காக்களை (Mega Integrated Textile Regions and Apparel Parks) அமைப்பதற்கான ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், ஜவுளித் துறையில் உற்பத்தி முதல் ஆடை உருவாக்கம் வரை அனைத்து நடவடிக்கைகளும் ஒரே இடத்தில் கொண்டுவரப்படும், இதன் மூலம் ஜவுளித் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் மற்றும் முதலீடுகள் பெருகும்.
- இது ஜவுளித் துறையை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட ஒரு மத்திய அரசு திட்டமாகும்.
- இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், ஜவுளித் துறையில் மதிப்பு சங்கிலியை (value chain) மேம்படுத்துவதாகும்.
- இதன் மூலம் ஜவுளித் துறையில் உற்பத்தித் திறன் அதிகரிக்கும், செலவுகள் குறையும், ஏற்றுமதி அதிகரிக்கும்.
- அதாவது, நூல் தயாரிப்பது முதல் ஆடை தயாரிப்பது வரை அனைத்து நடவடிக்கைகளையும் ஒரே இடத்தில் கொண்டுவருவதன் மூலம், ஜவுளித் துறையில் ஒரு ஒருங்கிணைந்த சூழல் உருவாக்கப்படும்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- ஜவுளித் துறையில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குதல்.
- புதிய தொழில்நுட்பங்களை ஜவுளித் துறைக்குள் கொண்டுவருதல்.
- வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்: அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த திட்டம் சுமார் 21 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது.
- பண்ணை முதல் ஆடை வரை (Farm to Fibre to Fabric to Fashion to Foreign) என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையால் ஈர்க்கப்பட்டது. இந்த திட்டம் ஜவுளித் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழ்நாடு ஜவுளித் துறையில் ஒரு முக்கிய மாநிலமாக இருப்பதால், இந்த திட்டம் தமிழ்நாட்டிற்கும் மிகவும் பயனளிக்கும். தமிழ்நாட்டில் ஜவுளி பூங்காக்கள் அமைப்பதன் மூலம், வேலைவாய்ப்புகள் பெருகும், முதலீடுகள் அதிகரிக்கும் மற்றும் ஜவுளித் துறை வளர்ச்சி அடையும்.
இந்த திட்டம் ஜவுளித் துறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
