டில்லி
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, நாடு முழுவதும் 682 ஜவுளி ஆலைகள் கடந்த ஜுன் மாதம் வரை மூடப்பட்டதாக பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.
பாராளுமன்ற கேள்வி நேரத்தில் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி மூடப்பட்ட ஆலைகள் பற்றி தகவல் அளித்தார். இந்த தகவலில் கூறப்பட்டுள்ளதாவது :
”இந்த வருடம் ஜூன் 30ஆம் தேதி வரை நாடெங்கும் 682 ஜவுளி ஆலைகள் மூடப்பட்டன. அதில் 232 ஆலைகள் தமிழகத்திலும், மகாராஷ்டிராவில் 85உம், 60 ஆலைகள் உத்திரப்பிரதேசத்திலும், 42 ஆலைகள் அரியானாவிலும் மூடப்பட்டுள்ளன. அதே போல நடைபெறும் 1339 ஆலைகளில் 752 தமிழ்நாட்டிலும், 135 மகாராஷ்டிராவிலும், ஆந்திராவில் 112 ஆலைகளும் உள்ளன”. என கூறி உள்ளார்.
புதிய ஜவுளி ஆலைகள் அமைப்பதற்கு அரசு தீட்டப்பட்ட திட்டங்கள் பற்றிய மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், “அரசு வெளிநாட்டு முதலீடுகள் ஜவுளித்துறையில் அதிக அளவில் பெற்றுத் தந்துள்ளது. ஜிஎஸ்டி ஜவுளித்துறையில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ஜவுளி ஆலைகள் அமைக்க ரூ. 30 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்படும் போது 15% உதவியை அரசு அளிக்க திட்டமிட்டுள்ளது. உபதொழில்களான நூல் உற்பத்தி, தறி நெய்தல், போன்றவைகளுக்கு ரூ. 20 கோடி வரை முதலிடு செய்யப்படும் ஆலைகளுக்கு 10% உதவியை அரசு அளிக்கும். அரசு ஜவுளித்துறையை மேம்படுத்துவதற்கு அனைத்து உதவிகளையும் அளிக்க தயாராக உள்ளது” என அமைச்சர் கூறினார்.