உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா 2021 ம் ஆண்டு கடைசி காலாண்டில் சுமார் 1.34 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.

கடந்த ஆண்டு 9,36,172 கார்கள் விற்பனையானதாக கூறிய அந்நிறுவன தலைவர் எலன் மஸ்க் 2022 ம் ஆண்டில் புதிய வகை கார்கள் எதுவும் அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்று கூறினார்.

கார் உதிரிபாகங்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் விநியோக சங்கிலியில் உள்ள சுணக்கம் போன்ற காரணங்களால் புதிய ரக கார்களை உருவாக்குவதை இந்த ஆண்டு நிறுத்திவைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதுள்ள ரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க கவனம் செலுத்தப்போவதாக கூறியுள்ளார்.

எலன் மஸ்க்-கின் இந்த அறிவிப்பு டெஸ்லா நிறுவன கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டும் வாடிக்கையாளர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அதேபோல், இந்நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய சைபர்-டிரக் எனும் அதிநவீன வாகனம் 2023 ம் ஆண்டு வரை தயாரிக்க வாய்ப்பில்லை என்றும் அறிவித்துள்ளது.