மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கின் பாதுகாப்புப் படை வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.

தேசிய நெடுஞ்சாலை 37ல் ஜிரிபாம் அருகே இன்று காலை முதல்வர் என் பிரேன் சிங்கின் கான்வாய் சென்றபோது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்

.

ஜிரிபாம், மாநிலத் தலைநகர் இம்பாலில் இருந்து 220 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, இது அஸ்ஸாமின் எல்லையில் தேசிய நெடுஞ்சாலை-37ல் உள்ள ஒரு முக்கிய நுழைவாயில் ஆகும்.

இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து குற்றவாளிகளை கண்டுபிடித்து, அப்பகுதியை பாதுகாக்க, போலீஸ் கமாண்டோக்கள் மற்றும் அசாம் ரைபிள்ஸ் அடங்கிய கூட்டு நடவடிக்கை தற்போது நடந்து வருகிறது.

வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜிரிபாம் பகுதிக்கு முதல்வர் என் பிரேன் சிங் நாளை வருவதை அடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நிலைமையை மதிப்பிடுவதற்காக இன்று முன்னதாகவே ஒரு குழுவை அனுப்பியிருந்தார்.

இப்பகுதியில் வன்முறை அதிகரித்துள்ள பின்னணியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு காணாமல் போன 59 வயதான மெய்தி சமூகத்தைச் சேர்ந்த விவசாயி சோய்பம் சரத்குமார் சிங் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், ஜூன் 6 முதல் அங்கு மீண்டும் வன்முறை நடைபெற்று வருகிறது.

இந்த வன்முறை அசாம் மாநிலத்திற்கும் பரவியதை அடுத்து அங்கு பல்வேறு இனப் பின்னணியைச் சேர்ந்த சுமார் 600 நபர்கள் கச்சார் மாவட்டத்தில் உள்ள லக்கிபூரில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் முதல்வரின் பாதுகாப்புப் படை வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.