விருதுநகர்: ராஜபாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரபல  கோவிலில் பணியாற்றி வரும் இரவு காவலாளிகள் இருவர் கோவில் வளாகத்திலேயே வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அமைந்துள்ளது  நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவில். இது ராஜபாளையத்தை அடுத்த தேவதானம்  பகுதியில் உள்ளது. இக்கோவிலில் மூலவராக சிவபெருமான் அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி  என்ற பெயரில் எழுந்தளியுள்ளார். இந்த சிவனுக்காக ‘நாகலிங்க மரம்’ தல விருட்சமாகவும், ‘தவமிருந்த நாயகி’ அம்மனாகவும் இருக்கின்றனர்.  இந்த கோவில் அந்த பகுதியில் பிரசித்தி பெற்றது.

இந்த கோவிலில் இரவு காவலர்களாக   பேச்சிமுத்து (50), சங்கர பாண்டியன் (65) ஆகியோர்  இருந்து வருகின்றனர்.  இவர்கள் இரவரும் நள்ளிரவு பணியில் இருந்த நிலையில், அவர்கள்  கொலை செய்யப்பட்டுள்ளது காலையில் தெரிய வந்தது. காலையில் கோவிலுக்கு வந்த பூசாரி மற்றும் பொதுமக்கள், கோவில் வளாகத் திற்குள் காவலர்கள்  இருவரும் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில்  கிடந்தது தெரிய வந்தது. மேலும், அருகே உள்ள  கோவில் உண்டியலும் சேதமடைந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், இறந்த காவலர்கள் உடலை அங்கிருந்து அகற்றியதுடன், அந்த பகுதியில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலில் உள்ள உண்டியலை உடைக்க முயற்சித்த கும்பலுக்கும் காவலர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலின்போது,   காவலர்கள் கொல்லப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. அதுபோல, முன்விரோதம்  காரணமாக, அல்லது காவலாளிகளை கொலை செய்துவிட்டு, கோவிலில் கொள்ளையடிக்க திட்டமிட்டனராக என்பத குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவிலுக்குள் 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.