ஜம்மு:

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மூலம் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி பிரித்துக் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


பண மோசடி தொடர்பாக காஷ்மீரில் உள்ள வர்த்தகர் ஜாஹுர் அகமத் ஷா வட்டாலி என்பவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது அவரின் ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கினர்.

இந்த ரெய்டில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், ஹுரியத் தலைவர்களுக்கு தீவிரவாத செயல்களுக்காக ஜாஹுர் அகமத் ஷா வட்டாலி நிதியுதவி செய்திருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், ஜாஹுர் அகமத் ஷா வட்டாலியின் மேலும் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பான தொடர் விசாரணையில், இந்தியாவின் வெளியேயிருந்து காஷ்மீர் பிரிவினைவாதிகள் ரூ.7 கோடி வரை நிதி பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச் செயல் குறித்து ஆராய்ந்தபோது, தீவிரவாதச் செயல்களுக்கான பணம், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலிருந்தே விநியோகம் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

குலாம் முகமது பட் என்பவரது வீட்டில் நடத்திய ரெய்டில் இந்த விவரம் தெரியவந்துள்ளதாகவும், இவர் ஜாஹுர் அகமத் ஷா வட்டாலியின் காசாளராகவும், கணக்காளராகவும் இருப்பவர் என்றும் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பாகிஸ்தான் தூதரக தரப்பிலிருந்து எவ்வித விளக்கமோ, மறுப்போ வரவில்லை.