விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை நடைபெற்ற பயங்கர வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலையில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சின்னகாமன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் வேலை நடந்துகொண்டிருந்தபோது இன்று(செவ்வாய்க்கிழமை) காலை, பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் ஆலையின் எட்டு அறைகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியை மேற்கொண்டனர். அப்போது, விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் படுகாயமடைந்த நிலையில் மேலும் 4 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் போர்மேன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.