உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.

வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்களை செயல்படுத்துதல், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் திட்டத்தை புதுப்பித்தல் மற்றும் அதன் ஒத்திகை மற்றும் சிவில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மே 7ம் தேதி இந்த பயிற்சியை மேற்கொள்ள பல்வேறு மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

1971 ஆம் ஆண்டு (இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரின் போது) இதுபோன்ற மாதிரி பயிற்சி நடத்தப்பட்டதால், இந்த அறிவிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபெரோஸ்பூர் கண்டோன்மென்ட் பகுதி முழுவதும் மின் தடைக்கான 30 நிமிட ஒத்திகை நடத்தப்பட்டது. கன்டோன்மென்ட் வாரியம்/நிலையத் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.

“இரவு 9 மணி முதல் இரவு 9:30 மணி வரை மின் தடை இருந்தது. மூத்த அதிகாரிகளின் உத்தரவின்படி, விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன. விளக்கு எரிந்த நிலையில் ஏதேனும் வாகனம் காணப்பட்டால், அது அணைக்கப்பட்டது… போலீசார் முழுமையாக உஷார் நிலையில் வைக்கப்பட்டனர். அனைத்து சந்திப்புகளிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்,” என்று ஃபெரோஸ்பூர் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தின் SHO குர்ஜந்த் சிங் கூறியதாக ANI செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.