நெல்லை:  திருநெல்வேலி அடுத்த தச்சநல்லூர் காவல்நிலையம் உள்பட 4 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு வீச்சு சம்பவம் அரங்கேறி உள்ளது. இது நெல்லையில் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

கஞ்சா வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நபரை  விடுவிக்க வைக்கும் வகையில், நெல்லை தச்சநல்லூர் காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல், அடுத்தடுத்து 3 இடங்கள் உள்பட  4  இடங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. இரு சக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

 

நெல்லை மாநகரின் முக்கிய காவல் நிலையங்களில் ஒன்றான தச்சநல்லூர் காவல் நிலையத்தில்  நேற்று  ஞாயிற்றுக்கிழமை என்பதால்  மாலை நேரத்தில் குறைந்த அளவே போலீசார் வழக்கம் போல தங்களது பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  யாரும் எதிர்பாராத போது காவல்நிலையத்தின் வெளியே பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்த உள்ளேயிருந்த காவலர்கள் வெளியே ஓடிவந்து என்ன நடந்தது என பார்த்தபோது,  காவல்நிலைய முன்பக்க காம்பவுண்ட் சுவரில்…. தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதன் அருகே பாட்டில் கண்ணாடிகள் சிதறி கிடக்க, பெட்ரோல் வாடையும் வீசியுள்ளது. அதை வைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

உடனே சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ய.. அதில் பல்சர் மற்றும் ஹோண்டா பைக்குகளில் வந்த ஐந்து இளைஞர்கள், அடுத்தடுத்து இரு பெட்ரோல் குண்டுகளை, காவல்நிலையத் தில் வீசி சென்றது தெளிவாக பதிவாகி இருந்தது. அதை தொடர்ந்து மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, அனைத்து சோதனை சாவடிகளையும் உஷார் படுத்தினர். சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களை, அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து அவர்களைப் பிடிக்க களத்தில் இறங்கினர். மேலும் ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தி வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த கும்பல் திருநெல்வேலி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரையிருப்பு சோதனை சாவடியை கடந்து செல்வது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை பிடிக்க   முயன்ற போது,  அந்த கும்பர், அவர்கள்மீது, பெட்ரோல் குண்டை வீசி அங்கிருந்த போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களை விரட்டிச் சென்றபோது, தாழையூத்து காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட தென்கலம் விலக்கு பகுதியில் பிடிக்க முயன்றபோதுரு,  மற்றொரு பெட்ரோல் குண்டை வீசி  அவர்களை நிலை குலைய செய்துள்ளது.   அடுத்தடுத்து நான்கு குண்டுகளை வீசி அவர்கள் தப்பிச்சென்றனர்.  இச்சம்பவம் ஒட்டுமொத்த நெல்லையையே அலற விட்டது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், வெடிகுண்டுகளை வீசிவிட்டு பைக்கில் தப்பிச் சென்ற இளைஞர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள்? காவல்நிலை யத்தின் மீதும், போலீசாரை நோக்கியும் பெட்ரோல் குண்டு வீசிய காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இதில் வெடிகுண்டுகளை வீசிய நபர்கள்,  நெல்லை ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார், கிருஷ்ண பெருமாள், சரண், அருண் உள்ளிட்ட ஐந்து பேர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இநத் கும்பல் கஞ்சா விற்பனை கும்பல் என்பதும் தெரிய வந்தது. ஏற்கனவே கஞ்சா வழக்கில், இந்த கும்பலைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிக்கும் வகையில், போலீசாரை மிரட்ட வெடிகுண்டு வீசியிருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக, அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதுவரை ஒருவர் மட்டுமே சிக்கிய நிலையில், தலைமறைவக உள்ள மற்ற 4 பேரையும் போலீசார் வலைவிசி தேடி வருகின்றனர்.

ஏற்கனவே கொலை, சாதிய மோதல்களுக்கு பெயர் பெற்ற நெல்லை மாவட்டத்தில், போலீஸ் நிலையம் மீதே கும்பல் பெட்ரோல் குண்டு வீடியிருப்பது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.