சிவகங்கை: காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றது. இது அந்த பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஈரானின் உயர் தலைவர் அலி காமேனி அமெரிக்க இஸ்ரேல் தாக்குலால் உயிரிழந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்இ ஈரானில் இருக்கும் ஆட்சிக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை.. அது ஒரு கொடூரமான ஆட்சி.. என கூறியிருந்தார். இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் மிரட்டலும் விடுக்கப்பட்டது. அவரது உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த ராமநாதன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு விடுக்கப்பட்ட மிரட்டலில், கார்த்தி சிதம்பரத்துக்கு விரைவில் மரணம் நெருங்கிவிட்டதாகவும், அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் எனவும் பதிவு வெளியிட்டிருந்தார். இதையறிந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருணா நகரைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் பழனியப்பன் என்பவர், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம் தலைமையிலான போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அத்துடன், காரைக்குடியில் அவருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது காரணமாக இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அவரது அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
காரைக்குடியில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் அலுவலகம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் தெற்கு முதல் வீதியில் ப.சிதம்பரம் எம்.பி உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பாட்டில் குண்டுகளை வீசி சென்றுள்ளனர். இதனால் அந்த குண்டுகள் சரியாக வெடிக்காத நிலையில், சில பகுதிகளில் மட்டும் லேசாக தீ பரவி உள்ளது.
இன்று காலை பணிக்கு வந்த காவலாளி இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பாட்டில்கள் சிதறி கிடந்துள்ளன. இது குறித்து உடனே கார்த்தி சிதம்பரத்துக்கும், அவரது அலுவலக உதவியாளருக்கும் தகவல் தெரிவித்தார். உடனே விரைந்து ந்த அலுவலக உதவியாளர் செந்தில் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து அங்கு காவல்துறையினர் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து ஆய்வு நடத்தினர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காமிராக்களையும் ஆய்வுசெய்து வருகின்றன. பெட்ரோல் குண்டு வீசியவர்கள், சிதம்பரத்தின் அலுவலகம் நோக்கியிருந்த ஒரு சி.சி.டி.வி., கேமராவையும் உடைத்துள்ளது தெரியவந்தது. இதனால் போலீசார் அப்பகுதியில் உள்ள மற்ற சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
தகவல் அறிந்த சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சமீபத்தில் வார்த்தைப் போரில் ஈடுபட்டிருந்த தி.மு.க.- காங்கிரஸ் இடையே சட்டமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு இறுதியானதில் ப.சிதம்பரம் முக்கிய பங்கு வகித்தார். இது காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி மோதல் எதிரொலியாக நடந்திருக்குமா என்று காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் எதிர்கருத்துக்கள் தெரிவிப்பவர்கள் அச்சுறுத்தப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வேண்டிய தமிழ்நாடு அரசு வாக்கு வங்கி அரசியல் செய்து வருகிறது.
நடுநிலைப் பேசுவதாக கூறுக்கொண்டு பலர், இதுபோன்ற வன்முறையாளர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதால், இதுபோன்ற அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. இதை அரசும், மக்களும் தட்டிக் கேட்க ஆரம்பித்து விட்டால் அச்சுறுத்தல்காரரகளின் கொட்டம் அடங்கிவிடும். ஆனால், செய்ய மக்கள் தயங்குவது அச்சுறுத்தல்காரர்களுக்கு இளக்காரமாக இருக்கிறது.
கருத்து சுதந்திரமும் மற்றும் செயல்பாடுகளும் ஒரு அளவுக்கு தான் அதை மீறி செல்வது இந்த தேசத்தின் நன்மைக்கு அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்
கருத்துக்கு பதில்… வன்முறையா? என்றால், அது தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
சர்வதேச விவகாரமாக இருக்கும் ஈரான் மீது நடந்த தாக்குதல் குறித்து தனது கருத்தை தெரிவித்ததற்காக காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் அவர்களுக்கு எதிராக முதலில் சிலர் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் அவரது உருவப்படம் எரிக்கப்பட்டது. அதை காவல்துறை சரியாக கையாண்டிருந்தால், தற்போது அவரது அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்காது. இதில் திமுக அரசின் காவல்துறை மவுனம் காப்பது வேடிக்கையாக உள்ளது.
அரசியலில், கருத்து கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனால் கருத்து தெரிவித்ததற்காக வன்முறை நடத்துவது ஜனநாயகத்திற்கு ஆபத்து. இந்த சம்பவத்தை திமுக – காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தலைவர்கள், அரசியல் கட்சிகள், மனித உரிமை பேசுபவர்கள் எத்தனை பேர் வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
கருத்துக்கு பதில் கருத்தாக இருக்க வேண்டும்… வன்முறையாக அல்ல!
[youtube-feed feed=1]