கோவை: கோவையில் கேஸ் டேங்கர் லாரி விபத்தால், லாரியில் இருந்து கேஸ் வெளியாகி வருவதால், அருகே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவைக்கு எல்பிஜி கேஸ் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி வந்தது. கோவை கணபதி பகுதியில் உள்ள குடோனுக்கு சென்று கொண்டிருந்த போது, உப்பிலிபாளையம் மேம்பாலத்தில், கட்டுப்பாட்டை இழந்த லாரி தலை குப்புற கவிழ்ந்தது. கோவை உப்பிலிபாளையம் அவிநாசி மேம்பாலம் என்ற பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதையடுத்து கவிழ்ந்த லாரியில் இருந்து கேஸ் லீக்காகியது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், டேங்கரில் இருந்து வெளியான வாயுவை தண்ணீர் ஊற்றி கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு சென்ற பொறியாளர்கள், வாயு கசிவு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதே சமயம், டேங்கர் லாரியை கிரேன் மூலம் மீட்பதற்கான பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது. டேங்கரின் ஒரே பகுதியில் லீக் இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தெரிய வந்திருக்கிறது. எரிவாயு கசிவை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 5மணி நேர போராட்டத்துக்கு பிறகு, வாயு கசிவு கட்டுப்படுத்தப்பட்ட உள்ளதால், டேங்கர் லாரியை பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். டேங்கர் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நிலையில் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டேங்கர் லாரி விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து 500 மீட்டர் அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணை யில் தகவல் தெரிய வந்துள்ளது.
கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான பகுதியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆய்வு நடத்தினர். பின்னர் செய்தியளார்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, வாயு கசிவு நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் தெரிவித்தார்.