கோவை: கோவை திமுக மேயருக்கு எதிராக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், மேயருக்கு எதிராகக தொடர் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக திமுகவினரின் நடவடிக்கைகள் எல்லை மீறி வருகின்றன. சமீபத்தில் மாவட்ட திமுக நிர்வாகி ஒருவர், என் அனுமதி இல்லாமல், மாவட்ட ஆட்சி தலைவரோ, காவல் கண்காணிப்பாளரோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என மிரட்டிய சம்பவம் தொடர்பான வீடியோ வைரலான நிலையில், பல பகுதிகளில் திமுகவினர் அத்துமீறி செயல்படும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், திமுக மேயருக்கு எதிராக, கோவை மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த கோவை மாநகராட்சியின் மாமன்றக்கூட்டத்தில், அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேரும் கூட்டம் தொடங்கியதுமே மாநகராட்சியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ட்ரோன் மூலம் சர்வே செய்து சொத்து வரி விதிப்பதை தடைசெய்ய வேண்டும், உயர்த்தப்பட்ட சொத்துவரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டம் நடத்தினர். இவர்களைத் தொடர்ந்து திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், கொமதேக கட்சியின் கவுன்சிலர்களும் இதே கோரிக்கைகளுக்காக மாமன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதான் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது.
இதுகுறித்து பேசிய கோவை மாநகராட்சி மாமன்ற எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் கட்சியின் அழகு ஜெயபாலன், “100 சதவீதம் சொத்துவரி உயர்வு, ஆண்டு தோறும் 6 சதவீதம் சொத்துவரி உயர்வு இதையெல்லாம் தீர்மான நிலையிலேயே நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். அதுபோல அபராதம் வரி உயர்வுக்கும் கண்டனம் தெரிவித்தோம். அதையும் மீறி அந்த தீர்மானங்களை நிறைவேற்றி விட்டனர்.
ஆனால், இதையெல்லாம் அமல்படுத்தினால் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாவர்கள்; அரசுக்குத்தான் கெட்ட பெயர் வரும். இதேபோல், ட்ரோன் மூலம் கட்டிடங்களை சர்வே செய்து அதனடிப்படையில் இஷ்டத்துக்கு வரி நிர்ணயித்தனர். வரி செலுத்த தாமதமானால் 1 சதவீதம் அபராதம் விதித்தார்கள். இதை எல்லாம் ஏற்கவே முடியாது என்று சொல்லித்தான் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
20-ம் தேதி ஆய்வுக்கு வந்த அமைச்சர் நேரு, ட்ரோன் சர்வே மற்றும் அபராதம் விதித்தல் உள்ளிட்டவற்றை ரத்து செய்வதாக அறிவித்தார்.
ஆனால், 100 சதவீத வரி உயர்வை 50 சதவீதமாக குறைத்தல், ஆண்டுக்கு 6 சதவீத வரி உயர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அப்படியே தான் இருக்கிறது. இவை நிறைவேற்றப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மேயர் ரங்கநாயகி, இதுதொடர்பாக கூட்டணிக் கட்சிகளிடமும் பேசி வருகிறோம். “ட்ரோன் சர்வேயை நிறுத்திவிட்டோம். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் உரிய காலத்தில் சொத்து வரியை உயர்த்தாமல் விட்டதால் இப்போது ஒரே சமயத்தில் 100 சதவீதம் வரியை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆண்டுக்கு 6 சதவீத வரி உயர்வு என்பது குறைவான தொகையே.
கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் இக்கோரிக்கைகள் தொடர்பாக என்னிடமோ, பொறுப்பு அமைச்சரிடமோ பேசியிருக்கலாம். அல்லது தங்களது கட்சி தலைவர்கள் மூலமாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கலாம். அதை விடுத்து, கூட்டணியில் இருந்து கொண்டு மாநகராட்சியை கண்டித்து மாநகராட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது எங்களுக்கு வருத்ததை ஏற்படுத்தியுள்ளது. அதை நாங்கள் வன்மையாக கண்டித்தும் விட்டோம்” என்றார் அவர்.