எல்லையில் பதற்றம்…. வற்றாத அரசியல் முதலீடு…
சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்
சீன எல்லை கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பதற்றம்.. இருதரப்பிலும் மோதல், ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.. ஒருவரையொருவர் கற்களாலும், தடிகளாலும் அடித்துக்கொண்டாதால்தன் உயிரிழப்பு என்கிறது முதல்கட்ட தகவல்..
இந்திய தரப்பில் ஒரு அதிகாரி உட்பட 20 பேர் வீரமரணம் அதில் ஒருவர், தமிழகத்தைச் சேர்ந்த பழனி என்பவர்.. அவர் மறைவுக்கு வீர வணக்கங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.. நாட்டுக்காக தன்னுயிரை ஈந்த ராமநாதபுரம் மாவட்ட ராணுவ வீரர் பழனிக்கு நாமும் வீரவணக்கம்.
அந்த பக்கம் சீனாவின் தரப்பில் 40க்கும் மேற்பட்டோர் பலி என சொல்கிறார்கள். அவர்களுக்கு அந்நாட்டு மக்கள் வீரவணக்கம் வைத்துக்கொள்ளட்டும்..
1967ல் இந்திய சீன எல்லையில் இதேபோல ராணுவ மோதல், இந்திய தரப்பில் 80 பேரும், சீனா பக்கம் சுமார் 400 பேரும் இறந்தனர்
53 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் பெரிய அளவில் மோதல் நிகழ்ந்துள்ளது. சரி போகட்டும், எல்லாவற்றையும் ஓரம் கட்டி வைத்துவிட்டு, விஷயத்திற்கு வருவோம்.
எல்லையில் பதற்றம்..வீரர்கள் பலி என்றதும் எல்லோருக்குமே தேசபக்தி பிய்த்துக்கொண்டுவந்து விடுகிறது..
‘’இந்தியா யாரென்பதை சீனாவுக்கு காட்டியே தீரவேண்டும்…’’ ‘எல்லைக்கே சென்று என்னுயிரை தியாகம் செய்யத் தயார்’’.. என்று பலரும் உணர்ச்சி பொங்குகின்றனர். இந்த மனோபாவம்தான் காலம் காலமாய் பல உண்மைகளைப்பற்றி யோசிக்க வைக்காமலேயே வைத்துள்ளது. கொஞ்சம் அலசிப்பாருங்கள்..
நமது அண்டை சீனாவோடும், பாகிஸ்தானோடும் தலைமுறை தலைமுறையாய் எல்லையில் பிரச்சினைகள் மோதல்கள், சதா பதற்றம்.
இருந்தாலும் இன்னொரு காரியம் மட்டும் நிற்காமல் நடந்தபடியே இருக்கும். பகைமை நாட்டு தலைவர்களுடன் இந்திய பிரதமர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்துப் பேசுவார்கள்.. அதன்முடிவில், இதுவரை தீர்க்கப்படாத எல்லை பிரச்சினை பேசி தீர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டு விட்டதாக சொல்வார்கள்.
‘’நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதிய தலைவர்கள்’’ என அந்தந்த நாட்டு ஊடகங்கள் புளங்காகிதப் படும் அந்தந்த தலைவர்களின் கட்சி ஆதரவாளர்கள் அதை வைத்து அந்த நாட்டில் அரசியல் பேசுவார்கள்.
நிதர்சனமான உண்மை என்னவென்றால், சாதனை பேச்சு வார்த்தை முடிந்த ஒவ்வொரு முறையும், கொஞ்ச நாளில், எல்லையில் தாக்குதல்கள் முன்பை விட பெரிய அளவில் நடக்கும்.
பாகிஸ்தானுக்கு பேருந்து, ரயில் போக்குவரத்து இயக்கி எல்லோரும் மகிழ்ந்தபோதுதான், கார்கில் போர் பின்னாடியே வந்தது. பல ஆண்டுகள் ஆகியும் எல்லையில் வெடிச் சத்தம் இன்னமும் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது.
ஆக இந்திய பாகிஸ்தான் என இரு நாட்டுத் தலைவர்களும் இதுநாள்வரை அப்படி எதைத் தான் பேசி சாதித்தார்கள் என்பது புரியாது, தெரியாது..
அதே வகையில், லேட்டஸ்ட் உதாரணம் சீன அதிபர் மற்றும் நமது பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பு.. 2018 சீனாவிலும் 2019 இந்தியாவிலும் இருவரின் சந்திப்பு நடைபெற்றது
கடந்த ஆண்டு, தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடந்த இந்திய சீன தலைவர்களின் சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மட்டுமின்றி உலக சரித்திரத்தையும் மாற்றப் போகிறது என்றெல்லாம் முன்கூட்டியே வர்ணிக்கப்பட்டது.
கம்யூனிஸ்ட்களை பிடிக்காததால் சீனாவின் பொருளை பகிஷ்கரிக்க வேண்டும் என்று ஓயாமல் குரல் எழுப்பிவந்த பாஜகவினர் கூட, சீனக் கொடியையும் நமது,தேசிய தேசியக் கொடியையும் ஒருசேரப் பிடித்து சீன அதிபரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆற்ற வேண்டும் என்று கோதாவில் இறங்கினார்கள்.
உலகின் மக்கள் தொகையில் முதல் இடத்திலும் இரண்டாவது இடத்திலும் உள்ள சீனாவும் இந்தியாவும் ஒன்றாக கைகோர்த்தால், உலகமே இரு நாடுகளின் கீழ் வந்தே ஆகவேண்டும். அமெரிக்காவெல்லாம் தலைதெறிக்க ஓடியாகவேண்டும் என்றுகூட சொன்னார்கள். மோடியின் ராஜதந்திரம் போல் வேறு எந்த தலைவருக்கும் வரவே வராது என்று போகிற, வருகிறவர்களை யெல்லாம் மடக்கி அடிக்காத குறையாய் சொன்னார்கள்..
அதற்கேற்றார் போல் சீன அதிபருக்கு இந்திய அரசு பெரும் பொருட்செலவு செய்து வரவேற்பு அளித்தது.. இத்தனைக்கும் மாமல்லபுரம் சந்திப்பு என்பது இருதரப்பு ஒப்பந்தங்களை நிவர்த்தி செய்யும் அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தை கொண்ட சந்திப்பு அல்ல. வெறும் விருந்தினர் வருகைதான் அது. மோடியும் சீன அதிபரும் சகோதர வாஞ்சையுட்ன் கட்டித்தழுவிய காட்சிகள் உலகம் முழுவதும் புதிய எதிர்பார்ப்புடன் செய்திகளாகின.
ஆனால் அந்த சந்திப்பு நடந்த கொஞ்ச காலத்திலேயே, இந்திய சீன எல்லையில் இதோ இப்போது, இரு தரப்பு ராணுவத்தினரிடையே மாபெரும் களேபரம்..
வழக்கம்போல களத்தில் உள்ள ராணுவ வீர்ர்கள் பலியாகி மக்களிடம் வீர வணக்கம் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மனைவிமார்களின் கண்ணீரை செய்தி சேனல்கள் வெள்ளமாய் பாயவிட்டுவருகின்றன.
ஆனால் அடிமட்ட ராணுவத்தை இயக்கும் அதன் தலைமைகளை பற்றியோ, அவர்களையும் சேர்த்து இயக்கும் நாட்டின் ஆட்சியாளர்களை பற்றியோ பெரும்பாலானோர் யோசிப்பதில்லை.
இன்றைய நிலையையே எடுத்துக்கொள்வோம்.
இந்தியாவின் பிரதமருக்கு சீன அதிபரோ, இல்லை சீன அதிபருக்கு நம் பிரதமரோ நேரயாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஏன் இப்படி நடக்கிறது, எங்கே கோளாறு என்று தாராளமாய் கேட்கமுடியும். அந்த அளவுக்கு நெருக்கமாவும் இணக்கமாகவும் இருவரும் உறவாடி வந்தவர்கள்தான். ஆனாலும் கேட்கவே மாட்டார்கள்.
‘’எங்கே தவறு நடந்தது என்பதை கண்டுபிடித்து நிலைமையை நான் சரி செய்கிறேன். இனி இப்படியெல்லாம் நடக்காது’’ என அண்டை நாட்டை சமாதானப்படுத்த மாட்டார்கள். ஆனால். ‘’ எங்களிடம் வாலாட்டினால் பலத்த அடி கொடுப்போம்’’ என்று நாட்டின் பெயரைக்கூட குறிப்பிடாமல் அவர் அந்த பக்கம் உதார் விடுவார், இவர் இந்த பக்கம் உதார் விடுவார்..
அப்புறம் பேருக்கு, கீழ்மட்ட லெவலில் பேச்சு வார்த்தை என ஆரம்பித்து அப்படியே காலத்தை ஓட்டுவார்கள். அப்படியே கொஞ்சநாளைக்கு அமைதியாக போகும். ஆனால் நிரந்தர தீர்வு மட்டும் கிடைக்கவே கிடைக்காது. இடையில் ராணுவ வீரர்கள் மட்டும் உயிரை இழந்துகொண்டே இருப்பார்கள்.
ஒரே கேள்வி, ஆட்சியாளர்களின் பேச்சை மீறி தங்கள் இருப்பைக்காட்ட களத்தில் உள்ள ராணுவத்தில் சிலர் முற்படுகின்றனரா, இல்லை, இந்த பக்கம் பேச்சு வார்த்தை நடத்தியபடி, களத்தில் ராணுவத்திற்கு வேறு மாதிரி உத்தரவுகள் போகிறதா? ஒன்றல்ல இப்படி ஏகப்பட்ட கேள்விகள்.. உலகம் முழுவதும் இதே கதைதான்..
உலகில், நல்ல ஆட்சியாளர்களுக்கு அழகு, நாளுக்கு நாள் ராணுவ பலத்தை அதிகரித்து காட்டுவது அல்ல. மக்களின் வரிப்பணத்தை பெருமளவில் குடிக்கும் ராணுவ செலவுகளை குறைக்க, அண்டை நாடுகளுடன் பேச்சு வார்த்தை ஒட்டுமொத்த வாழ்வியல் நிலைமையை புரியவைத்து இருதரப்பிலும் ஆயுத குறைப்பை செய்யவைப்பது.
உலகை காலம் காலமாக பதற்றத்திலேயே வைத்திருக்க பல்வேறு லாபிகளோடு உலாவரும், ஆயுத வியாபாரிகளின் சூழ்ச்சிக்கும் கமிஷன்களுக்கும் இறையாகாமல் இருந்தாலே போதும்.
அப்புறம் நடப்பில் உள்ள இன்னொரு பொங்கல் விஷயத்திற்கு மீண்டும் வருவோம். நாடெங்கும் இப்போது தேசபக்தி வெள்ளமென எடுத்து பாய்ந்துகொண்டிருக்கிறது. கேள்வி கேட்பவன் எல்லாம் தேச துரோகியாகவும் ராணுவத்தை மதிக்காதவனாகவும் சித்தரிக்கப்பட்டு ஸ்பெஷல் தேசபக்தர்களால் கழுவி கழுவி ஊற்றப்படுகிறான்.
ஆமாம், இங்கே இன்னொரு விஷயத்தையும் அலசிப்பாருங்கள்., ராணுவத்தை சேர்ந்த யார் எந்த தருணத்தில் இருந்தாலும் அது வீர மரணம் ஆகிவிடுகிறது. அப்படியானால் மற்ற துறைகளில் பணியாற்றுபவர்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்யவில்லையா?
மலைக்கிராமங்களில் பல கிலோமீட்டர் நடந்துசென்று பணியாற்றும் மருத்துவர்களும் ஆசிரியர்களும் உயிரை பணயம் வைத்து வனப்பகுதி வழியாக சென்றுவருவதில்லையா?.
ராணுவ வீரர்களாவது சண்டைவரும்போதுதான் சாகிறார்கள். ஆனால் ஒரு அரசு பேருந்து ஓட்டுநர் தினம் தினம் நூற்றுக்கணக்கான பயணிகளை பாதுகாப்புடன் கொண்டுசெல்கிறார். ஒரு நூறு கிலோ மீட்டரை சாலையில் கடப்பதற்குள் அவர் பத்துமுறையாவது சாமர்த்தியமாக செயல்பட்டு விபத்திலிருந்து தப்பிதப்பி பிழைத்து அனைவரையும் காக்கிறார்.
இப்படி தினம் தினம் செத்து பிழைக்கும் ஒரு அரசு பேருந்து ஓட்டுநர் பணியின் போது இறந்தால், என்றைக்காவது வீர வணக்கம் சொல்லியிருக்கிறோமா? ஓட்டுநர்கள் மட்டுமல்ல, காவல், தீயணைப்பு மின்சாரம், சுரங்கம் போன்றவற்றுடன் பணியாற்றும் ஒவ்வொருவரும் உயிரை பணயம் வைத்துதான் பணியாற்றுகின்றனர். அதனால் இந்த வீர வணக்கத்தை பொறுத்தவரை தேவையானவருக்கு தகுதியுள்ளவருக்கு சாதித்துவிட்டு மரணமடையும்போது செலுத்துவதுதான் உகந்தது.
அப்புறம் உடனே இந்தியா படையெடுத்து சீனாவை துவம்சம் செய்யவேண்டும் என்று ஒரு கோஷ்டி.. இன்னொரு பக்கம்,, பலம் வாய்ந்த சீனாவை இந்தியாவால் ஒன்றும் செய்யமுடியாது என்ற கோஷ்டியின் அலப்பறைகள்.
1962ல் சீனாவுடனான போரின்போது, இந்தியாவின் ராணுவ பலம் வேறு, இப்போது கூடியிருக்கும் அதன் பலம் வேறு. என்பது மறுக்கமுடியாத உண்மை. அதேபோலத்தான் சீனாவின் பலமும் பலமடங்கு கூடியிருக்கிறது.
இங்கே நிதர்சனம் என்னவென்றால், அவ்வளவு சுலபத்தில் சீனாவும் போரில் இறங்காது, இந்தியாவும் போரில் இறங்காது. இரண்டு நாடுகளுமே இப்போது பல விஷயங்களில் நொந்துபோன நிலையில் உள்ளன.
சீனாவிற்கு கொரோனா வைரஸால் உள் நாட்டில் பலத்த அடி. அங்கிருந்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மூட்டைகட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன.
நோய், பொருளாதார மந்தம், வேலைவாய்ப்பின்மை போன்றவற்றால் சீனாவில் இப்போது மக்கள் கடுமையான வெறுப்பில் இருக்கிறார்கள்.
இந்தியாவிலும் ஏறக்குறைய இதே நிலைமைதான். ஏற்கனவே பொருளாதார மந்தம், இப்போது போதாக்குறைக்கு கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் கூடிப்போகும் உயிர்பலிகளால் எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைமை. நாட்டின் ஒட்டுமொத்த எதிர்காலமே என்னவாகுமோ என்ற நிச்சயமற்ற தன்மை.
இந்த நேரத்தில் போர், அதிரடித்தாக்குதல் என்று போனால், முதலுக்கே மோசம் என்பது இரு நாட்டு ஆட்சியாளர்களுக்கு தெரியும்.
வெரி சிம்பிள்.. கீரி, பாம்பு சண்டை என கடைசிவரை கண்காட்டி வித்தைதான். மோதவிட்டால் இரண்டும் ஒரே நாளில் செத்துப்போய் கையில் இருக்கும் முதலீடே அவுட்..
பெரும்பாலான உலக நாடுகளில், ஆட்சியாளர்களுக்கு அரசியலில் பிழைத்திருக்க சில ஆயுதங்கள் இருக்கும். அதில் ஒன்றுதான், எல்லையில் பதற்றம்.. பகைமை நாட்டை காட்டிக்காட்டியே உள்ளுர் நிர்வாக கோளாறுகள், மோசடிகளை மறைப்பார்கள், அரசியல் எதிரிகளையும் வாயடைக்க வைத்துவிடுவார்கள்.
நாட்டையும் மக்களையும் நேசிக்கற உண்மை யான ஆட்சியாளன், ஆயுத பலத்தைவிட, அண்டை நாடுகளுடன் அமைதியான மார்க்கத் தைத்தான் பெரிதும் நம்புவான்.. அதை உருவாக்கத்தைதான் அயராமல் பாடுபடுவான்..
சண்டைபோட தைரியமில்லாதவன் என்ற விமர்சனம் கடுமையாக எழுந்தாலும்.. தேவையற்ற போரில் வீரர்கள் கொல்லப்படுவதற்கு முன், முதலில் சாகடிக்கப்படுவது ‘’உண்மை’’ என்ற பரிதாப ஜீவன்தான்.
உலகம் முழுவதும் இந்த ‘’உண்மை’’ சாகடிக்கப்படும் களத்தில் இருந்து வரும் தகவல்களை நம்பித்தான் உணர்ச்சிவசப்பட்ட மக்கள் பொங்கிக்கொண்டிருக்கின்றனர்.