சென்னை

ரூ. 62.57 கோடியில் சென்னை மாநகராட்சிக்கு புதிய மாமன்ற கூடம் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

கடந்த 1688ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகை, 1909ம் ஆண்டு கட்டப்பட்டது. ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இதன் கட்டுமானப்பணி 1913ம் ஆண்டு முடிக்கப்பட்டது. சுமார் 113 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ரிப்பன் மாளிகையில் 2வது தளத்தில் தான் மாமன்ற கூடம் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. மேயர் தலைமையில் மிகவும் பழமை வாய்ந்த இந்த மாமன்ற கூடத்தில் ஒவ்வொரு மாதமும் மாமன்ற கூட்டம்  நடத்தப்பட்டு வருகிறது.

இது மிகவும் பழமை வாய்ந்த கட்டிடம் என்பதால் கடும் இடம் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கூடத்தில் போதிய அளவில் இடவசதி இல்லாததால், 150 பேர் மட்டுமே அமரும் வசதி கொண்ட மாமன்ற கூடத்தில் 200 கவுன்சிலர்கள் அமர்ந்து உள்ளனர். இது வரலாற்று சிறப்புகளும், பராம்பரியமும் மிக்க கட்டிடம் என்பதால் புதிய மன்றக் கூடம் அமைக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

இடப்பற்றாக்குறையால் பல கவுன்சிலர்கள் அமர முடியாமல் மன்ற கூட்டத்திற்கு வராமலேயே உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போத் சென்னை மாநகராட்சி 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 200 வார்டுகளில் மொத்தம் 89 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். எனவே அனைத்து வார்டுகளிலும் ஒரே அளவு வாக்காளர்கள் இருக்கும் வகையில் மறு சீரமைக்கப்பட்டு, வார்டுகளின் எண்ணிக்கை தற்போது 300 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வார்டு எண்ணிக்கை 300 ஆக உயரும் போது மாமன்ற கூட்டத்தின் போது புதிதாக இடம்பெற உள்ள 100 கவுன்சிலர்களுக்கு இருக்கை போட முடியாத நிலை ஏற்படும்.

ஆகவே, புதிதாக மன்ற கூடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. சென்னை மாநகராட்சியில் வார்டுகள் எண்ணிக்கை அதிகரிக்க உள்ள சூழ்நிலையில் இட நெருக்கடியைச் சமாளிக்க புதிய மாமன்றக் கூடம் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இந்த புதிய கட்டிடம், சென்னை மாநகராட்சி அலுவலகம் இயங்கும் ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூ.62.57 கோடியில் கட்டப்பட உள்ளது. புதிய கட்டடத்திற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி நேற்று டெண்டர் கோரியது. 24 மாதங்களில் புதிய மாமன்ற கட்டுமான பணிகளை முடிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. எனவே, விரைவில் இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், தற்போதுள்ள மாமன்ற கூடத்தின் பெருமையை காக்க, அதனை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து, பொதுமக்கள் பார்வைக்காக ஒப்படைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை சுற்றுலா தலமாக பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ள தகவல் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: புதிதாக மன்ற கூடம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கைகள் எழுந்தது. தற்போதுள்ள இட நெருக்கடியை சமாளிக்கும் வகையில் புதிய மன்ற கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வார்டுகள் எண்ணிக்கையை 300 ஆக உயர்வதால் அதற்கேற்றவாறு சுமார் 90,000 சதுர அடி முதல் 1 லட்சம் சதுர அடியில் 300 கவுன்சிலர்கள் அமரும் வகையில் இந்த புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது. இதற்காக ரூ.62.57 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நேற்று டெண்டர் கோரப்பட்டுள்ளது.