சென்னை: உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக தமிழகஅரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை, பள்ளி மேலாண்மைக் குழு மூலம், தொகுப்பூதியத்தில், தற்காலிக அடிப்படையில் நிரப்புமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இதற்கு பட்டதாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு கட்சி, அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. மேலும் டெட் தேர்வு எழுதி, வேலைக்காக காத்திருப்போர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, தற்காலிக ஆசிரியர் பணி நியமனங்களை நிறுத்திவைக்குமாறு பள்ளிக்கல்வித் துறை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது. ஏற்கனவே பணிக்கு எடுத்தவர்களையும் நீக்குமாறு அறிவுறுத்தியது.
இதைத்தாடர்ந்து, தற்போது உயர்நீதிமன்ற உத்தரவு படி ஆசிரியர் நியமனம் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வி துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
தற்காலிக ஆசிரியர் நியமனம் – வழிகாட்டு நெறிமுறைகளின் முழு விவரம்:
- 01.06.2022 வரை காலியாகவுள்ள பணியிடங்களை மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை மாவட்டக்கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
- மாவட்டக் கல்வி அலுவலர் அந்த விண்ணப்பங்களை தற்காலிக நியமனம் கோரும் பள்ளித் தலைமையாசிரியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- தமிழக அரசின் விதிகளின் படி கல்வித் தகுதி பெற்று இருக்க வேண்டும்.
- ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
- இடைநிலை ஆசிரியர் பதவிக்கு டெட் தேர்வின் தேர்வுதாள் 1-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு டெட் தேர்வின் தேர்வுதாள் 2-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- முதுநிலை ஆசிரியர் பதவிக்க 2020ல் வெளியான அரசாணைப்பட தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- இல்லம் தேடிக்கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம்
- முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்காக டிஆர்பி சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களையும் நியமிக்கலாம்.
- பள்ளிக்கு அருகே, மாவட்டத்துக்குள் வசிப்போருக்கு முன்னுரிமை தந்து நியமனம் செய்யலாம்.
- திறமை அடிப்படையில் மட்டுமே தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
- இந்நியமனமானது முற்றிலும் தற்காலிகமானது
- மாறுதல் மற்ற முறையான நியமணங்களின் மூலம் காலிப்பணியிடம் பூர்த்தி செய்யப்படும் அன்றே தற்காலிக ஏற்பாட்டின் பேரில் பணியமர்த்தப்பட்டவர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்.
- பணி மற்றும் நடத்தை திருப்தி இல்லையெனில் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்படுவர்.
- 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்பிக்கலாம்.