மதுரை: தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததும், கோவில்கள் திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டதுடன் கோவிலை சுற்றி வந்து ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஆய்வு பணிக்காக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்ததாகவும், தமிழகத்தில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு, பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். தற்பொழுது கோவில்களில் பக்தர்களுக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்படவில்லை, மற்றபடி அனைத்து பூஜைகளும் தடையின்றி நடைபெற்று வருவதாகவும் கூறியவர், கோயிலில் உள்ள நகைகள், ஆபரணங்கள் குறித்த ஆவணங்களை இணையத்தில் வெளியிட முடியாது. அவ்வாறு வெளியிட்டால், அவைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகி விடும் என்றும், கூறினார்.
கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் 24 வயது கோவில் யானை பார்வதியின் உடல்நிலை குறித்தும் கோயில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்ததாக தெரிவித்தார்.