புராதன பெருமை கொண்ட சிலைகள் கடத்தி பதுக்கப்பட்டிருப்பதை சமீபத்தில் சிலை கடத்தல் பிரிவு கண்டுபிடித்தது. இதற்கிடையே, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், பல வருடங்களுக்கு முன்பே தங்கச் சிலை திருட்டுபோனதும், அதை வெளியில் சொல்லாமல் போலி சிலையை வைத்து அர்ச்சனை செய்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது.
இதையடுத்து கோயில்களில் உள்ள மதிப்பு வாய்ந்த சிலைகள் உண்மையானவையா, அல்லது அவை திருடப்பட்டு போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளனவா என்ற பீதி பக்தர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.
“தொல்லியல்துறையினர், தமிழகத்தின் அத்தனை கோயில்களில் உள்ள சிலைகளயும் ஆராய்ந்து உண்மையை வெளிப்படுத்தவேண்டும்” என்பதே பக்தர்களின் கோரிக்கை.
தொல்லியில் துறை அதிகாரிகள் வட்டாரத்திலோ, “சிலைகளை ஆய்வு செய்ய அறநிலையத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை.
தமிழக கோவில்களில் உள்ள சிலைகள் பற்றிய முழுத் தகவல்களின் பட்டியலை அளிக்க மறுக்கின்றனர்” என்று கூறப்படுகிறது.
அறநிலையத்துறையினரோ, “போதுமான ஊழியர்கள் இல்லாமல், அன்றாட பணிகளைச் செய்வதே எங்களுக்கு சிரமமாக இருக்கிறது” என்கிறார்கள்.
இந்த நிலையில் “சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் முழுமையாக தீரவிரம் காட்டப்படும். கோவில்களில் இருந்து காணாமல் போன சிலைகளை கண்டறிந்து விரைவில் அவற்றை மீண்டும் ஒப்படைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
இனியாவது அறநிலைத்துறையில் போதுமான பணியாளர்களை நியமித்து, தொல்லியல் துறையினருக்கு ஒத்துழைப்பு அளித்து சிலைகள் காணாமல் போவது தடுக்கப்பட வேண்டும்… , காணாமல் போன சிலைகள் கண்டுபிடிக்கப்படவும் வேண்டும்.
மகிழன்