சென்னை: கோவில்களை பராமரித்து வரும், தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை, தனது செலவுகளை கோவில் நிதியியிலிருந்து செலவழிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களை கையகப்படுத்தி உள்ள தமிழ்நாடு அரசு அதில் கிடைக்கும் வருமானங்களைக்கொண்டு கோவில்களை முறையாக பராமரிக்காமல், மற்ற பணிகளுக்காக செலவிட்டு வருகிறது. பல கோவில்களில் அடிப்படை வசதிகள் கூட சரிசெய்யப்படுவது இல்லை. இது பக்தர்களிடையே கடும் அதிருப்தியையும், கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
இதையடுத்து, ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தார். கோவில் நிதியில் இருந்து கோவில்களுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்றுதான் சட்டம் சொல்கிறது. ஆனால், தமிழ்நாடு செய்யாமல் மற்ற செலவுகளுக்கு கோவில் நிதியை பயன்படுத்தி வருகிறது. மேலும், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிதியில் கல்லூரிகள் திறந்து வருகிறது. கல்லூரிகள் திறப்பதற்கு தமிழ்நாடு அரசுதான் நிதி ஒதுக்க வேண்டுமே தவிர கோவில் நிதியின் இருந்து பயன்படுத்தக்கூடாது, அதனால் ‘தமிழஅரசின் தவறான நடவடிக்கையை தடை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடநத் விசாரணையின்போது, மனுதாரர், கோவில் நிதியில் அறநிலையத் துறை ஆணையர், இணை ஆணையர்கள், ஆய்வாளர்கள் அலுவலகங்களில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும், முந்தைய ஆட்சியில் அமைச்சருக்கு வாகனங்கள் வாங்கவும், கணினிமயமாக்கவும், பேருந்து நிலைய விரிவாக்கத்துக்கும், மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டவும்‘ பயன்படுத்தப்படுவதாக, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களை சமர்ப்பித்தார்.
கோவில்களை நிர்வகிப்பதற்காக நிர்வாகக் கட்டணமாக மொத்த வருமானத்தில் 12 சதவீதம் வழங்கப்படும் நிலையில், கோவில் நிதியை அறநிலையத்துறைக் காக பயன்படுத்துவதாகவும், எந்த தயக்கமும் இல்லாமல் கோவில் நிதியை அரசு நிதி போல பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். சிறப்பு தணிக்கை செய்தால் அத்தனை விஷயங்களும் அம்பலத்துக்கு வரும் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, கோவில் நிதி, தேவையில்லாமல் வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது எனவும், அறநிலையத் துறை செலவுகளுக்கு தொகுப்பு நிதியில் செலவழிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோவில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது எனவும், கண்காணிப்பு என்ற பெயரில் கோவில் வளங்களை எடுக்க முடியாது எனவும் கூறி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி 8 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.