மறுபிறவி என்பதே வேண்டாம் என்று எண்ணுபவர்கள் செல்லவேண்டிய ஆலயம்
மனிதனுக்கு மறு பிறவி உண்டா? ஏழேழு ஜென்மம் என்ற தத்துவங்கள் எல்லாம் உண்மை தானே? இப்படிப் பல ஆய்வுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் இன்றளவும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் நம்முடைய சாஸ்திரத்தைப் பொறுத்தவரை இவை அனைத்தும் உண்மை என்றே நம்பப்படுகிறது.
மறுபிறவி இல்லாத ஒரு மனிதன் உன்னத நிலையை அடைவான் என்ற நம்பிக்கையும் நம்மிடையே இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் நுழைந்து இறைவனை மனதார தரிசித்தாலே போதும் மறுபிறவி என்பதே இருக்காது என்ற ஒரு நம்பிக்கை உண்டு. வாருங்கள் அந்த கோவில் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், தேப்பெருமாநல்லூர் என்ற இடத்தில் இருக்கிறது ஸ்ரீ விஸ்வநாத சுவாமி திருக்கோவில். வேதாந்த நாயகி, சமேத விஸ்வநாதர் இந்த கோவிலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளை வழங்குகின்றன.
இந்த கோவிலுக்குள்ள தனித்துவம் என்ன வென்றால் இந்த கோவிலுக்குள் யார் வேண்டுமானாலும், நினைத்த உடன் எளிதில் செல்ல முடியாது. அப்படியே சென்றாலும் இறைவனை மனமுருகி வணங்காமல் அவருடைய அருளைப் பெற முடியாது. ஏன் என்றால் மறுபிறவி இல்லாதா ஒரு உன்னதமான வரத்தைத் தரக்கூடியவராய் இருக்கிறார் இங்குள்ள இறைவன்.
நம்ப முடியாத பல விஷயங்கள் இந்த கலியுக நாட்களில் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் கடந்த 2010 ஆம் ஆண்டு சூரிய கிரகணத்தின் போது, இங்குள்ள சிவபெருமானைத் தரிசிக்க வந்த நாகம் ஒன்று தனது தோலினை சிவபெருமானுக்கு மாலையாக அணிவித்து, வில்வ இலைகளை வைத்துப் பூஜைசெய்து சென்றுள்ளது.
பிரதோஷ தினத்தன்று இக்கோவிலுக்குச் சென்று வழிபடுவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மற்ற கோவில்களின் விதிமுறைகளுக்கும், இந்த கோவிலின் விதி முறைக்கும் இடையே பல மாறுதல்கள் இருக்கின்றன. இக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் வேறு எங்கும் காணமுடியாத மாறுபட்ட கோலத்தில் காட்சி அளிக்கின்றன.
மிகவும் பழமையான இந்த கோவிலில் நான்கு வருடங்களுக்கு முன்னர் காலை 4 மணி முதல் 9 மணி வரை தீபம் தானாக அணைந்தும், மற்ற நேரங்களில் தானாகவே எரிந்தும் கொண்டிருந்த அதிசயம் நடந்துள்ளது. இந்த கோவிலின் தெற்கு திசை நோக்கித் தனி சன்னதியில் வேதாந்த நாயகி அம்மன் வலது காலை முன்னோக்கி வைத்து உதட்டினை குவித்து நம்மிடம் பேசுவது போன்ற தோற்றத்தில் காட்சி அளிக்கிறார்கள். வேதாந்த நாயகி அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
அடுத்ததாகச் சாந்த பைரவர் என்ற சிறிய உருவிலும் மகா பைரவர் என்ற பெரிய உருவிலும் இருக்கும் இரண்டு பைரவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரே ஆலயத்தில் இருக்கும் சிறப்பும் இந்த கோவிலுக்கே உரிய சிறப்பம்சமாகும்.
காக்கை வாகனத்தில், சனி பகவான் ஒய்யாரமாக மேற்கு திசை நோக்கிக் காட்சியளிக்கிறார். இவர் சிவபெருமானைப் பிடிப்பதற்கு முன்னர், அம்பாளை வேண்டி அவரின் அருளைப் பெற்றிருந்த ஆனந்த காட்சி இதுவே ஆகும். சனி தோஷம் உள்ளவர்கள் இந்த சனி பகவானை வணங்கினால் தோஷம் நீங்கும் என்பதும் இக்கோயிலின் சிறப்பாக உள்ளது.
சனி பகவானின் தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறுவதற்காகச் சிவபெருமான் 12 ஜோதிர்லிங்கங்களை ஒன்று சேர இக்கோவிலுக்குள் வரவழைத்தார். அவர்களில் ஒருவரான காசிவிஸ்வநாதர் இக் கோவிலின் உள்ளேயே நிரந்தரமாக வாசம் செய்கிறார். ஜோதிட லிங்கங்களில் ஒன்றை நாம் வழிபட்டோம் என்றாலே நமது பாவங்கள் அனைத்தும் மறைந்துவிடும். ஆனால் 12 ஜோதிர்லிங்கங்களும் இந்த இடத்தில் தோன்றி அருள் புரிந்தமையால் இந்த கோவிலுக்குள் ஏழேழு ஜென்மத்திலும் எந்தவித பாவங்கள் செய்யாதவர்களும், மற்றும் மறுபிறவி இல்லாதவர்களும் மட்டும் தான் உள்ளே நுழைய முடியும்.