சீர்காழி: கோவில் சிலைகளை கருவறைக்குள் பதுக்கி வைத்திருந்த, கோவில் குருக்கள் சூரியமூர்த்தி என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பழம்பெரும் கோவில்களில் இருந்து ஏராளமான சிலைகள் திருடு போயுள்ளது. இதில் பல இடங்களில் சாமி சிலைகள் திருட்டுக்கு கோவில் பூசாரிகளும், கருக்களும் உதவியாக இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் சில இடங்களில் கோவில் குருக்களே சிலைகளை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீர்காழி அருகே உள்ள மன்னங்கோயில் என்ற கிராமத்தில் அருள்பாலித்து வரும், மன்னார்சாமி நல்ல காத்தாயீ கோயிலில் 40 ஆண்டுகளுக்கு முன் நான்கு சிலைகள் திருட்டு போனது. இதுதொடர்பாக சிலை தடுப்பு காவல்துறை விசாரணை நடத்தி வந்தது. அந்த கோவிலின் குருக்களான சீர்காழி அருகே நெம்மேலியைச் சார்ந்த விசாலாட்சி கோவில் குருக்களிடம் நடத்திய விசாரணையில், அவரது பதில் திருப்திகரமாக இல்லாததால், தொடர் விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர் ப மன்னார்சாமி நல்ல காத்தாயீ கோயில் கருவறைக்குள் சில சிலைகளை மறைத்து வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து, அந்த சிலைகளை காவல்துறையினர் மீட்டனர். அதில், பிரதோஷ நாயகர், பிரதோஷ நாயகி சிலை இருந்தது. ஆனால், இந்த சிலைகள் வேறு கோவிலை சேர்ந்தது என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, சூரிய மூர்த்தியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த காத்தாயீ அம்மன் வெள்ளி கவசம், இரண்டு வெள்ளி குத்து விளக்கு, சிறிய வெள்ளி குடம் போன்றவை சிக்கின. அவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.