மெகபூப் நகர்
தெலுங்கானாவில் உள்ள மெகபூப் நகரில் ஒரு பள்ளி மாணவன், தனது ஆசிரியர் வகுப்பறையில் தூங்கியதை படம் எடுத்ததற்காக போலீசாரால் அடித்து உதைக்கப்பட்டார்.
பலால ஹக்கூலா சங்கம் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் அச்சுத ராவ் கடந்த சனிக்கிழமை மெகபூப் நகரில் ஒரு பத்தாம் வகுப்பு மாணவனை வாலிபால் போஸ்ட்டில் கட்டி வைத்து அடித்து உதைத்ததாக ஒரு தகவல் தெரிவித்தார்.
இது பற்றி அவர் கூறியதாவது :
”மெகபூப் நகர் ஜில்லா பரிஷத் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு இந்த கொடுமை நடைபெற்றுள்ளது. கடந்த ஜூலை 27ஆம் தேதி வகுப்பில் பாடம் எடுக்காமல் ராமுலு என்னும் கணித ஆசிரியர் உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார். இதை தன்னிடம் இருந்த மொபைல் காமிரா மூலம் படம் எடுத்த ஒரு மாணவர் அதை வாட்ஸப் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு அனுப்பியுள்ளார். அடுத்த நாள் ராமுலு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த மற்ற ஆசிரியர்கள் இந்த மாணவருக்கு ஒரு பாடம் கற்பிக்க எண்ணி, சப் இன்ஸ்பெக்டர் சையதுலு, மற்றும் அசிஸ்டெண்ட் சப் இன்ஸ்பெக்டர் ஜஹாங்கீர் ஆகியோரிடம் முறையிட்டுள்ளனர். அவர்கள் இருவரும், பள்ளியில் புகுந்து அந்த மாணவரை கன்னத்தில் அறைந்து, வாலிபால் போஸ்டில் கட்டி வைத்து குச்சியால் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.
அவருக்கு காலிலும், கையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டும், அதை கண்டுக் கொள்ளாமல் மாணவரை காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்று அவருடைய மொபைல் ஃபோனையும் கைப்பற்றி உள்ளனர்.
அந்த மாணவர் எங்கள் பலால ஹக்கூலா சங்கத்துக்கு அனுப்பியுள்ள வாய்ஸ் மெசேஜில் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு தம்ஸ் அப் கூல் ட்ரிங்க் வாங்கி அருந்திக் கொண்டிருந்ததாகவும் அப்போது இந்த சம்பவம் நடந்ததாகவும் எங்களுக்கு தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த காவல் அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவேண்டும்”
இவ்வாறு அச்சுத ராவ் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர், தரப்பில் அந்த மாணவர் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து பள்ளி வளாகத்தில் மது அருந்தியதாகவும், அதற்காக அவர் காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
மெகபூப்நகர் காவல் அதிகாரி ரமா ராஜேஸ்வரி இது குறித்து கூறுகையில் ஒரு, மாணவர் மற்றும் சிலருடன் சேர்ந்து பள்ளி வளாகத்தில் மது அருந்தியதற்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்டதாகவும், அவர் அடித்து உதைக்கப்ப்ட்டாரா என்பதை அறிய விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் அடிக்கப்பட்டிருந்தால் அதற்காக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
அச்சுத ராவ் “மாணவரின் உடலில் போலீசார் குச்சியால் தாக்கப்பட்டதற்கான காயங்களும் தழும்புகளும் உள்ளன. இது குழந்தைகளுக்கு எதிரான வன்முறையாகும். எனவே இந்த விஷயத்தை நீர்த்துப் போகச் செய்ய போலீசாரால் முயற்சி செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கிறார்..