சென்னை: தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் வாழும் தெலுங்கு, கன்னட மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதுபோல எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான இபிஎஸ்,ஓபிஎஸஸ்சும் உகாதி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

உகாதி திருநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ” அறுசுவைப் பச்சடி, மாவிலைத் தோரணம், புத்தாடையுடன் உகாதி புத்தாண்டுத் திருநாளைச் (ஏப்.2) சிறப்புடன் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழகத்தில் வாழ்ந்து வரும் மொழிச் சிறுபான்மையினர் நலனில் திமுக அரசு என்றுமே அக்கறையோடு செயல்பட்டு வந்துள்ளது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உகாதி திருநாளில் அரசு விடுமுறை அறிவித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

வரலாற்றுரீதியாகவே விந்திய மலைத்தொடருக்குத் தெற்கே வாழும் திராவிட மக்கள் தமக்குள் ஏராளமான பண்பாட்டுக் கூறுகளில் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளனர். ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக விளங்குகின்றனர். இந்தத் தொடர்ச்சி என்றும் நீடிக்க வேண்டும். நமக்கிடையேயான உறவு வலுப்பட வேண்டும். நமது பண்பாட்டையும் மொழியையும் காக்க ஒன்றிணைந்து நிற்பது வரலாற்றுத் தேவை என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

வேற்றுமைகள் கடந்து, நம்மிடையேயான உறவைப் போற்றும் திருநாளாக இந்த உகாதித் திருநாள் அமைந்திட தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

உகாதி திருநாளையொட்டி,  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூட்டாக  வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “யுகாதித் திருநாளை உவகையுடன் கொண்டாடி மகிழும், உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எங்களது இதயமார்ந்த யுகாதி திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் தாங்கள் பேசும் மொழி வேறுபட்டிருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வுடன் தமிழகத்தில் பல நூறு ஆண்டுகளாய் ஒருமித்து வாழ்ந்து வருவதும், ஒருவரோடு ஒருவர் நல்லுறவைப் பேணி, ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதும், தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது

 

இவ்வண்ணமே தமிழக மக்களோடு இணைந்து சகோதர, சகோதரிகளாய், தூய சொந்தங்களாய் வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் இந்தப் புத்தாண்டில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றியே பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை அன்போடு உரித்தாக்கிக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.