ஐதராபாத்
கடன் விதிமுறைகளை மீறித் தீர்ப்பளித்த ஜப்தி நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் மத்திய நிதி அமைச்சகத்துக்குப் பரிந்துரை செய்துள்ளது.
வாரங்கல் நகரில் உள்ள சிந்தகுண்டா குறுக்குச் சாலையில் வசிக்கும் ஒருவர் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தை ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் அடமானம் வைத்து ரூ.15 லட்சம் கடன் பெற்றார். அத்துடன் மேலும் ரூ.5 லட்சம் கடன் வாங்கி தனது நிலத்தில் அரை ஏக்கர் ஒரு கோழிப்பண்ணை அமைத்தார். மீதமுள்ள நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.
கடந்த 2014 ஆம் வருடம் பரவிய பறவைக்காய்ச்சல் மற்றும் தீவன விலை உயர்வால் அவருக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் அவரால் கடன் தவணை தொகையை அளிக்க முடியவில்லை. இது குறித்து அவர் அளித்த விளக்கத்தை ஏற்காத வங்கி நிர்வாகம் அவர் மீது ஜப்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிபதியும் அவருடைய விளக்கத்தை ஏற்காமல் நிலத்தை ஏலம் விட உத்தரவு இட்டார்.
சட்டப்படி விவசாய நிலத்தை வங்கிகள் ஏலம் விடக்கூடாது என்பதை நீதிபதி ஏற்கவில்லை. கோழிப்பண்ணை உரிமையாளரின் வழக்கறிஞர் மொத்தமுள்ள நிலத்தில் அரை ஏக்கர் மட்டுமே கோழிப்பண்ணைக்காகப் பயன்படுத்தப்பட்டதை நிரூபித்த போதிலும் நிலம் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் ரூ.59 லட்சத்துக்கு நிலத்தை வாங்கியவர் அந்த பணத்தை வங்கி விதித்த கெடுவான 15 நாட்களில் செலுத்தாமல் மூன்று வருடம் கழித்துச் செலுத்தி உள்ளார்.
ஆயினும் வங்கி அவருக்கு விற்பனைப்பத்திரத்தை வழங்கி உள்ளது. இது குறித்து கோழிப்பண்ணை உரிமையாளர் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராமச்சந்திர ராவ் மற்றும் லட்சுமணன் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் நீதிபதியின் நடவடிக்கைகளைக் கடுமையாக கண்டித்துள்ளது.
ஜப்தி நீதிமன்ற நீதிபதி வங்கிக்கு ஆதரவாகச் சட்டத்தை மீறித் தீர்ப்பு அளித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்தைத் தீர்ப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் வங்கி நிர்வாகம் ஏலம் எடுத்தவருக்கு அவருடைய தொகையைத் திரும்ப அளிக்க வேண்டும் எனவும் ஏலம் விடப்பட்ட நிலத்தைக் கோழிப்பண்ணை உரிமையாளருக்குத் திரும்ப அளிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் வழக்கு செலவுக்காக வங்கி அவருக்கு ரூ.10000 அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.