வெளிமினேடு, தெலுங்கானா
சாமியார் ராம் ரஹீம் தெலுங்கானா மாநிலத்தில் வாங்கியுள்ள நிலமும் அங்குள்ள ஆசிரமும் அரசு எடுத்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம், நலகோண்டா மாவட்டத்தில் உள்ளது வெளிமினேடு கிராமம். ஐதராபாத் – விஜயவாடா நெடுஞ்சாலையில் உள்ள அழகிய கிராமம் இது. இந்த கிராமத்தில் சில ஏக்கர் நிலங்களை சாமியார் ராம் ரஹிம் வாங்கி அதனுள் ஆசிரமம் ஒன்றை 2008ல் அமைத்துள்ளார்.
ஆசிரமம் மட்டும் 56 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. சுற்றிலும் 10 அடி உயரத்துக்கு மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஆசிரமம் அமைக்க உள்ளூர் வாசிகள் ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். புகார்கள் மேல் புகார்கள் குவியவே, சென்ற வாரம் ஆசிரமம் உள்ள இடத்தில் தாசில்தார் விசாரணை நடத்தினார்.
பலாத்கார சாமியார் ஆசிரமம் கட்ட வாங்கிய இடத்தில் 9 ஏக்கர் நிலம் அதன் உரிமையாளருக்கு அரசால் கொடுக்கப் பட்ட இடமாகும், அதை அனுபவிக்க மட்டுமே அவருக்கு உரிமை உண்டு. அவர் அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்றால் அந்த விற்பனை செல்லாது. மீண்டும் அரசே அந்த இடத்தை எடுத்துக் கொள்ளலாம் என்பது அரசு விதிகளில் ஒன்று.
ஆனால் உள்ளூர் வாசிகள் மொத்தம் 15 ஏக்கர் நிலம் அரசால் நிலமற்றோருக்கு வழங்கப்பட்ட நிலம் என்றும் அதை சாமியாரின் ஆசிரம நிர்வாகத்திடம் இருந்து மீட்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். அரசு மறு சர்வே ஒன்றை நிகழ்த்தி அந்த இடம் விரைவில் அரசுடமையாக்கப் படும் என அறிவித்துள்ளது.