தராபாத்

பிரதமரை பற்றி தவறாக பேசியதாக தன்னை மிரட்டும் பாஜகவினருக்கு தெலுங்கானா முதல்வர் பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் பிரதமரைப் பற்றி தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தவறாக பேசியதாக தகவல்கள் வெளியாகின.   மேலும் அவர் பிரதமர் மோடியை அவன் இவன் என ஒருமையில் பேசு வருவதாகவும் செய்திகள் வந்தன.   இதற்கு பாஜகவில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.   இதைத் தொடர்ந்து தெலுங்கானா அரசியல் களம் மிகவும் பரபரப்புக்கு உண்டானது.

இதற்கு தெலுங்கானா முதல்வர் பதில் அளித்துள்ளார்.  அவர், “நான் பிரதமரப் பற்றி என்றுமே தவறாக பேசவில்லை.    இந்தக் குற்றசாட்டு 100% தவறான குற்றச்சாட்டு ஆகும்.   நான் அவரை தெலுங்கி காரிகி (மரியாதைக்குரிய ஒரு சொல்) எனக் கூறியதை காடிகி (தவறான ஒரு வார்த்தை) என திரித்து வெளியிடப்பட்டுள்ளது.   இதற்காக அவர்கள் என்னுடன் தகராறு செய்ய விரும்பினால் அது அவர்கள் விருப்பம்.   அதே போல நான் அவன் இவன் என ஒரு போதும் அவரை சொல்லியதில்லை.

இதற்காக என்னை தாக்கி அறிக்கை விடும் பாஜக தலைவர்கள் முதலில் தங்கள் அறிக்கையில் சிறிது கண்ணியம் காக்க வேண்டும்.   பிரதமர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா?   அவரை யாரும் விமர்சிக்கக் கூடாதா?  இதில் என்ன தவறு உள்ளது?.  இது என்ன குடியரசு நாடா இல்லை சர்வாதிகார நாடா?   நான் பிரதமரை விமர்சித்தால் சிறைக்கு போக நேரிடும் என பாஜகவினர் மிரட்டுகின்றனர்.  நான் அந்த மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்.

பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசு இனி தெலுங்கானா அரசை கண்காணிக்கும் என மற்றொரு மிரட்டல் விடுத்துள்ளார்.   கண்காணிக்கட்டுமே.  எங்களுக்கு பயம் இல்லை.   தெலுங்கானாவில் பாஜக என ஒன்று உள்ளதா?  அதை ஒரு முக்கிய கட்சி எனவே நாங்கள் கண்டுக்கொள்வதில்லை.   அதே போல காங்கிரஸும் என்ன ஒரு வித்தை செய்தாலும் 10 இடங்களை கூட வரும் 2019 தேர்தலில் வெல்ல முடியாது.”  என தனது பதிலில் கூறி உள்ளார்.