ஐதராபாத்: 2024ம் ஆண்டு மத்தியில் ஆட்சியை பிடிக்கும் வகையில், புதிய தேசிய கட்சியை இன்று தெலுங்கான முதல்வர் கேசிஆர் இன்று அறிவித்து உள்ளர். அதன்படி, புதிய தேசிய கட்சியின் பெயர், ‘பாரத் ராஷ்டிர சமிதி’ என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய முதல்வர் நாளைய பிரதமர் என்ற போஸ்டர்கள் மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள நிலையில், டிஆர்எஸ் கட்சியினர், இந்த அறிவிப்பை பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்கின்றனர்.
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்காக மாற்றாக புதிய தேசிய கட்சியை தொடங்க உள்ளதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும், தெலுங்கான முதல்வருமான சந்திரசேகரராவ் ஏற்கனவே கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து, பாஜகவுக்கு மாற்றாக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். பல மாநில முதல்வர்கள், எதிர்க் கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வந்தார். இந்த நிலையில், இன்று புதிய தேசிய கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக இன்று காலை தசரா பண்டிகையையொட்டி, பிரகதிபவனில் முதல்வர் ஸ்ரீ கே.சந்திரசேகர் ராவ் சிறப்பு பூஜைகளை நடத்தினார். முதலில் முதல்வர் தம்பதி மற்றும் குடும்பத்தினர் நல்ல போச்சம்மா கோவிலில் பூஜை செய்தனர். பின்னர் வேத பண்டிதர்கள் முன்னிலையில் ஜம்மிமரத்திற்கு பாரம்பரிய பூஜை செய்யப்பட்டது. அங்கு கூடியிருந்த அனைவருக்கும் புனித ஜம்மி இலையை முதல்வர் வழங்கினார், பரஸ்பர வாழ்த்துகளையும் ஆசிகளையும் வழங்கினார். பின்னர் பிரகதி பவனில் ஆயுதபூஜை செய்தார் முதல்வர். இந்த நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள், சிஎம்ஓ அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து கட்சி அலுவலகத்துக்கு மதியம் வருகை தந்தார். அவரை வரவேற்க கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் குழுமியிருந்தனர். சாலை முழுவதும் இன்றைய முதல்வர், நாளைய பிரதமர் என எழுதப்பட்ட பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன
தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தனது புதிய தேசிய கட்சிக்கு ‘பாரத் ராஷ்டிர சமிதி’ (Bharat Rashtra Samithi) என்ற பெயரை அறிவித்துள்ளார். ஏற்கனவே தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி என இருக்கும் மாநில கட்சியை, பாரத் ராஷ்டிர சமிதி என பெயர் மாற்றம் செய்துள்ளார். டிஆர்எஸ்-ஐ பிஆர்எஸ் என பெயர் மாற்ற பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. டிஆர்எஸ் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த முடிவை கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் இந்த தேசிய கட்சிக்கு, தற்போதைய டிஆர்எஸ் கட்சிக்கு உள்ள கார் சின்னத்தையே ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கட்சி தேசிய அளவில் பல்வேறு கட்சிகளுடன் இணைந்து ஒரு 3வது அணியை கட்டமைப்பும் என்று கூறப்படுகிறது.