ஐதராபாத்: தமிழ்நாட்டை தொடர்ந்து தெலுங்கானாவில் 1 முதல் 10 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவு திட்டம்  அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம்  இன்று தொடங்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது, முதலமைச்சராக காமராஜர் இருந்தபோது, பள்ளி குழந்தைகளின் பசிப்பிணியை நீக்கி, அவர்கள் கல்வி பயிலும் வகையில் மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், அதை மறைந்த எம்ஜிஆர் ஆட்சியில் மேம்படுத்தப்பட்டு சத்துணவு திட்டமாக மாறியது. தொடர்ந்து, பின்னர் வந்த முதல்வர்களான கருணாநிதி,  ஜெயலலிதா, ஓபிஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலங்களிலும் இந்த திட்டம் மேலும் மெருகூட்டப்பட்டது.

2021ம் ஆண்டு சட்டபேரவையில் திமுக மீண்டும் ஆட்சியை பிடித்ததும்,  பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டு வரப்படும்  தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஏற்கனவே எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது, இந்த திட்டம் பரிசார்த்த முறையில் சில பள்ளிகளில் மட்டுமே கொண்டு வரப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை  காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பை  கிடைத்துள்ளது.

இந்த நிலையில், தெலுங்கானாவில் நடப்பாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால்,  தெலுங்கானா மாநில பள்ளிகளிலும், காலை உணவு திட்டத்தை கொண்டு வர முதலமைச்சர் கேசிஆர் முடிவு செய்தார். இதுகுறித்து அறிந்துகொள்ள அண்மையில் தெலங்கானா மாநில அதிகாரிகள் சென்னை வந்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து, தெலுங்கானா மாநிலத்தில் காலை உணவு திட்டம் இன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.   தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானா அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டத்தை தொடங்கி உள்ளது.  ரூ. 400 கோடி செலவில் செயல்படுத்தும் இத்திட்டத்தால் 43,000 அரசு பள்ளிகளில் பயிலும் 30 லட்சம் மாணவர்கள் பயன் அடைய உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்து உள்ளது. அத்துடன் தினசரி என்ன உணவு வழங்கப்பட வேண்டும் என்ற மெனுவையும் வெளியிட்டு உள்ளது.

அதன்படி,  திங்கள் கிழமை கோதுமை ரவா உப்மா மற்றும் சட்னியும், செவ்வாய் கிழமை அரிசி ரவா கிச்சடியுடன் சட்னி, புதனன்று பம்பாய் ரவா உப்மா மற்றும் சட்னி, வியாழன் கிழமை ரவா பொங்கல் மற்றும் சாம்பார், வெள்ளிக்கிழமை தினை ரவா கிச்சடியுடன் சாம்பார், சனிக்கிழமை கோதுமை ரவா கிச்சடி மற்றும் சட்னி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.