அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் டிசம்பர் 4ம் தேதி இரவு புஷ்பா-2 படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
இதைப் பார்க்க அல்லு அர்ஜுன் சென்ற நிலையில் அவரை சூழ்ந்துகொண்டு அவரது ரசிகர்கள் அதிகளவில் அந்த திரையரங்கிற்குள் நுழைந்ததில் ரேவதி என்ற 39 வயது பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் அந்த திரையரங்க உரிமையாளர் மற்றும் அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று காலை அல்லு அர்ஜுனை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து நம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அல்லு அர்ஜுனை 14 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கவேண்டும் எனவும் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அல்லு அர்ஜுன் வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர் காவல்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி அல்லு அர்ஜுன் படம் பார்க்க சென்றதால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
மேலும், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த அல்லு அர்ஜுனின் வழக்கறிஞர், காவல்துறையினர் எச்சரிக்கை வழங்கினார்களே தவிர கூட்டம் கூடும் என்று தெரிந்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வில்லை தவிர அல்லு அர்ஜூனுக்கும் பாதுகாப்பு தர முன்வரவில்லை.
அதுமட்டுமன்றி, அல்லு அர்ஜுன் முதல் தளத்தில் உள்ள பால்கனியில் இருந்து படம் பார்த்த நிலையில் நெரிசல் மற்றும் உயிரிழப்பு சம்பவம் தரை தளத்தில் நிகழ்ந்துள்ளது என்று விளக்கமளித்தார்.
இந்த மனுவை ஏற்று அல்லு அர்ஜுன் மீதான வழக்கை ரத்து செய்து அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கை ரத்து செய்வது குறித்து திங்களன்று விசாரிக்கப்படும் என்றும் அதுவரை அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டுள்ளார்.
அல்லு அர்ஜுனுக்கு 14 நாள் போலீஸ் காவல் நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவு… சஞ்சல் குடா சிறையில் அடைப்பு