மோமோஸ், ஷவர்மா, சாண்ட்விச், பிரெட் ஆம்லெட் ஆகியவற்றுடன் கலக்கப்படும் மயோனைஸ் சாஸ் உணவு வகைக்கு தெலுங்கானா அரசு ஓராண்டு தடை விதித்துள்ளது.

மோமோஸ் சாப்பிட்டதில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் நச்சுத்தன்மை கொண்டதாகத் தெரியவந்துள்ளது.

உணவு பதப்படுத்தும் போது முட்டையில் உள்ள நுண்ணயிர்களை அழிப்பதற்கான முறைகள் சரியாக மேற்கொள்ளப்படாததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முட்டை அடிப்படையிலான மயோனைஸ் சாப்பிட்டதில் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாகப் புகார்கள் அதிகரித்ததாகக் கூறும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கேரளாவைப் போன்று தெலுங்கானாவிலும் மயோனைஸ்க்கு தடை விதிக்க பரிந்துரைத்தனர்.

இதனையடுத்து முட்டையில் உள்ள நுண்ணுயிர்களை கையாள்வது மற்றும் முறையான உணவு பதப்படுத்தல் ஆகியவற்றை உறுதி செய்யும் நிறுவனங்களின் தயாரிப்புகள் தவிர மற்ற அனைத்து மயோனைஸ் உணவு வகைக்கும் ஓராண்டு தடை விதிப்பதாக அக்டோபர் 30ம் தேதி தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.