பாட்னா: ஒருதலைப்பட்சமாக, பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தொலைக்காட்சி சேனல்களின் விவாதங்களை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டுமென, ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது பல தேசிய தொலைக்காட்சி சேனல்கள் உட்பட, நாட்டின் பல்வேறான சேனல்கள், ஒரு சார்பாக செயல்பட்டு, ஆளும் பாரதீய ஜனதாவுக்கு சாதமாக இருந்து வருகின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.

எனவே, இதுகுறித்து தேஜஸ்வி யாதவ் எதிர்க்கட்சிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, “பாரதீய ஜனதா கட்சி, ஊடகங்களை வெற்றிகரமாக வளைத்துள்ளது. எனவே, அவர்களின் செல்வாக்கிற்கு உள்ளாகிய சேனல்கள், ஏற்கனவே முடிவுசெய்யப்பட்ட ஒரு ஸ்கிரிப்டை வைத்துக்கொண்டு, விவாதங்களை ஒருதலைபட்சமாக, சிறிதுகூட ஊடக அறத்தைப் பின்பற்றாமல் கொண்டு செல்கின்றன.

பாரதீய ஜனதா கட்சிக்கு சேவை செய்வதையே நோக்கமாக கொண்டு செயல்படுகின்றன. மேலும், எதிர்க்கட்சிகளை மக்கள் மத்தியில் மோசமாக சித்தரிக்க வேண்டும் என்பதிலும் அந்த சேனல்கள் குறியாக இருக்கின்றன. வரும் தேர்தலில், மத்திய ஆளும் கட்சியின் வெற்றி வாய்ப்புக்காக அவை பாடுபடுகின்றன.

அந்த சேனல்களின் செயல்பாடுகள், இந்திய சமூகத்தில் வெறுப்பை விதைத்து, வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளன. எனவே, எதிர்க்கட்சிகள் இந்த சேனல்களின் அழைப்பை புறக்கணித்தால், அச்சேனல்கள் தங்களுடைய முன்திட்டமிட்ட விவாதப் போக்குகளையும் கலந்துரையாடல்களையும் நிகழ்த்த முடியாது” என்றுள்ளார்.

– மதுரை மாயாண்டி