டெல்லி:

மும்பை-கோவா இடையிலான 600 கி.மீ., தூரத்தை 9 மணி நேரத்தில் சென்றடையும் வகையில் தேஜாஸ் ரெயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை இந்த ரெயிலை ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் தொடங்கி வைத்தார்.

மறுநாள் இந்த ரெயில் கோவாவில் இருந்து மும்பை வந்தடைந்தது. வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படுகிறது. 992 பயணிகள் பயணம் செய்ய முடியும். இதில் சேர் கார் மற்றும் எக்சிகியூட்டிவ் பிரிவுகள் உள்ளது. ஆயிரத்து 185 ரூபாய் முதல் 2 ஆயிரத்து 940 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

மணிக்கு 200 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த ரெயிலில விமானத்திற்கு சமமான வசதிகள் செய்யப்பட் டுள்ளது. எல்சிடி டிவி, வைபை, சிசிடிவி, ஹெட்போன்கள், டீ மற்றும் காபி விற்கும் எந்திரங்கள், பயோ வே க்கம் கழிப்பிடங்கள், சென்சார் பொறுத்தப்பட்ட குழாய்கள் என வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் பயணத்தை முடித்துக் கொண்டு மும்பை திரும்பிய இந்த ரெயிலில் ஏற்பட்ட அனுபவத்தை கண்டு ரெயில்வே நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது.

ரெயிலில் உள்ள பல வசதிகளை பயணிகள் சீரழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டிவி மானிட்டர்களையும், ஹெட்போன்களையும் திருடிச் சென்றுவிட்டனர். எல்சிடி டிவிக்களை சேதப்படுத்தப்பட் டுள்ளது. கழிப்பிடம் அழுக்கு படித்து மோசமான நிலையில் இருந்தது. பயணிகளை கவரும் வகையில் ரெயில்வே ஏற்படுத்திய திட்டங்கள் தற்போது வேறுவிதமான பிரச்னைகளை சந்தித்து வருகிறது.

பயணத்திற்கு பிறகு ஹெட்போன்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். மாறாக 12 ஹெட்போன்களை பயணிகள் தங்களது பாக்கெட்டில் போட்டுக் கொண்டு சென்றுவிட்டனர். ராஜ்தானி மற்றும் சதாப்தி போன்ற நீண்ட தூர ரெயில்களில் பயணிகள் போர்வை உள்ளிட்டவைகளை திருப்பி கொடுக்கின்றனர்.

அதேபோல் ஹெட்போன்களையும் திருப்பி கொடுப்பார்கள் என்ற ரெயில்வேயின் நம்பிக்கை பொய்த்துபோனது. இது போன்று தேஜாஸ் ரெயிலில் ஏற்பட்ட நடைமுறை சிக்கலை எதிர்கொள்ள ரெயில்வே புதிய திட்டங்களை தீட்டி வருகிறது.