ஐதராபாத்
தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு தேர்தல் பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் 48 மணி நேரம் தடை விதித்துள்ளது.
நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற்று ஜூன் 1ம் தேதி கடைசி கட்டமான 7ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
வரும் 13 ஆம் தேதி தெலுங்கானாவில் மொத்தமுள்ள 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளன. அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
, கடந்த 5ம் தேதி சிர்சிலா பகுதியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சந்திரசேகர ராவ் காங்கிரஸ் தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். அவர் காங்கிரஸ் தலைவர்களை ‘நாய்களின் மகன்கள்’ என கூறி விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ்கட்சி சந்திரசேகர ராவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்ததுடன், சந்திரசேகர ராவ் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. தேர்தல் ஆணையம் இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி சந்திரசேகர ராவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. அவர் அந்த நோட்டீசுக்கு விளக்கம் அளித்தார்.
ஆயினும் தேர்தல் நடத்தை விதிகளை சந்திரசேகர ராவ் மீறியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதுடன் அவர் 48 மணிநேரத்திற்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. நேற்று இரவு 8 மணி முதல் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது.