புதுடெல்லி: விராத் கோலி ஒருநாள் ஓய்வுபெறப் போவது நிச்சயம்; எனவே, அவரையே எப்போதும் நம்பிக் கொண்டிராமல், அணியிலுள்ள மற்றவர்கள் பொறுப்பை உணர்ந்து ஆட முயல வேண்டும் என்றுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மான்ட்டி பனேசர்.

அவர் கூறியுள்ளதாவது, “நாம் முன்னோக்கி சிந்திக்க வேண்டிய நேரமிது. இந்தியக் கிரிக்கெட்டின் எதிர்காலம் என்ன? விராத் கோலி ஒருநாள் ஓய்வுபெறுவது நிச்சயம். எனவே, அவரைப்போன்ற ஒரு சிறந்த வீரரை எப்போதும் நம்பிக்கொண்டிருக்க முடியாது.

பிறரும் பொறுப்பை உணர்ந்து செயல்படுவது அவசியம். விராத் கோலி இல்லாத இந்திய கிரிக்கெட்டை நாம் கண்டறிவது காலத்தின் தேவை. அவர் இல்லாத எஞ்சிய 3 போட்டிகளில் அது தெரியவரும்.

விராத் கோலி, ரோகித் ஷர்மா மற்றும் ரஹானே ஓய்வுபெற்றுவிட்டால் அடுத்தது யார்? இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஷப்மன் கில்லுக்கு பெரிய பொறுப்பு காத்துள்ளது.

டெஸ்ட் தொடரை எந்த அணி கைப்பற்றும் என்பதைப் பற்றி இங்கே நான் பேசவில்லை. மாறாக, அணியின் எதிர்காலம் குறித்தே பேசுகிறேன்” என்றுள்ளார் அவர்.