ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை அடுத்து உலக தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியை பின்னுக்குத் தள்ளிய இந்திய அணி 115 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது, ஆஸ்திரேலியா அணி 111 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்தப் பட்டியலில் 106 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இம்மாதம் 16 ம் தேதி துவங்கும் டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு முதல் மூன்று இடத்தைப் பிடிக்க இந்த அணிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருநாள் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகள் ஆகியவற்றில் ஏற்கனவே இந்திய அணி முதலிடத்தில் உள்ள நிலையில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்திருப்பதன் மூலம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் எடுத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ்-ஸை விட 21 புள்ளிகள் குறைவாகப் பெற்று தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.