சென்னை: பள்ளிகளில் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க பெண் ஆசிரியர் தலைமையில் தனிக்குழு  உருவாக்கப்படும் என பள்ளிகல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

‘தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

சென்னை தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆன்லைன் வகுப்பு தொடர்பான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாமல் இருக்கிறது.

ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர் மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிட உள்ளது என்றார்.

மேலும், சென்னை தனியார் பள்ளியில்  பாலியல் புகார் கூறப்பட்டுள்ள ஆசிரியரை கல்வி நிறுவனம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. இந்த ஆசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து கல்வி நிறுவனம் சார்பில் குழு அமைத்து விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்து இருப்பதாக கூறியவர், இனி ஆன்லைன் வகுப்புகள் பிரச்சினை வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.,

பாலியல் புகார் விவகாரத்தின் மூலம் நல்ல ஆசிரியர்களுக்கும் களங்கம் வரக்கூடாது என்பதற்காக தனி குழு அமைத்து பள்ளிகளில் பாலியல் புகார்கள் விசாரிக்கப்படும் எனவும்,  இந்த குழுவுக்கு  பெண் ஆசிரியர் ஒருவர் தலைமை வகிப்பார் எனவும், அனைத்து பள்ளிகளிலும் விசாகா கமிட்டி உள்ளதா செயல்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் இனிமேல் இதுபோன்ற பிரச்னை வராமல் தடுக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.