சென்னை: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களுக்கு வீடு தேடிச்சென்று பாடம் நடத்தும் புதிய திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக மழலையர், தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கே நேரடியாக சென்று பாடம் நடத்த பணிக்கப்பட உள்ளனர்.
கொரோனா தொற்ற பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் அடுத்தடுத்து அறிவித்து வரும் பொதுமுடக்கத்தால், கல்விநிலையங்கள் சுமார் ஒன்றரை வருடங்களாக மூடிக்கின்றன. மாணாக்கர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால், குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. மழலைக்குழந்தைகள், தொடக்கப்பள்ளி குழந்தைகள், எழுத்துக்கள் எழுதவும், வாசிக்கவும் தெரியாத நிலையில், அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவது கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகிறது. அதுபோல பல பகுதிகளில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள், பள்ளி திறக்கப்படாத நிலையிலும், மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கேச் சென்று கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் பாடம் எடுத்து வருகின்றனர். மாநிலத்தில் பல்வேறு கிராமப்புற பகுதிகளில் இதுபோன்று கல்வி போதிக்கும் நிகழ்வுகள் ஏராளமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.
கல்வியாளர்களும் ஆசிரியர்கள் வீடு தேடி சென்ற பாடம் எடுக்கும் முறையை வரவேற்றுள்ளனர். சில ஆசிரியர்கள், ஏழை மாணவர்களுக்கு செல்போன் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தும், ஆன்லைன்மூலம் கல்வி போதித்து வருகின்றனர்.
ஆனால், தலைநகர் சென்னையில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள், தங்களது பள்ளியில் படிக்கும் மாணாக்கர்களின் நலன்மீது அக்கறைகொள்ளாமல் தான்தோன்றித் தனமாக செயல்படுவதாகவும், பெற்றோர்களின் கேள்விகளுக்கு முறையான பதில் தெரிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் கல்வித்துறைக்கு சென்றுள்ளதாகவும், இதனால், வகுப்புகள் தொடங்கப்படாத நிலையிலும் அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வர வேண்டும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் இந்த பள்ளியில் தற்போது எல்கேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணாக்கர்களுக்கு, பாடம் சொல்லிக் கொடுக்கும் வகையில், வீடு தேடி பள்ளிகள் என்ற புதிய திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தவுள்ளது. கற்றல் இடைவெளியைப் போக்க ஆசிரியர்கள் மாணாக்கர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் வகையில் இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அத்துடன், வீதி வகுப்பறை என்ற பெயரில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் நிகழ்ச்சிகளை நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கைஎடுத்து வருகிறது.
இந்த திட்டத்தை முதற்கட்டமாக சென்னையில் அமல்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, ஒவ்வொரு ஆசிரியரும், தங்களது பள்ளியில் படிக்கும் மாணாக்கர்களின் பகுதிக்கு சென்று, அங்குள்ள மாணாக்கர்களை ஒருங்கிணைத்து, தினசரி 2 மணி நேரம் பாடங்கள் நடத்தவும், பல்வேறு செயல்முறை நிகழ்ச்சிகள் நடத்தவும் அறிவுறுத்தப்படுவார்கள் என்றும், அவர்கள் பணி செய்வதை தொடக்கக் கல்வி அலுவலர்கள் கண்காணிப்பார்கள் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நவம்பர் 1ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னதாக அக்டோபர் மாதமே, வீடு தேடிச் சென்று பாடம் நடத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.