தஞ்சாவூர்: கொரோனா பணியில் ஈடுபட ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக்கூடாது, விருப்பமுள்ளவர்கள் பணிக்கு வரலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.

தஞ்சையில்  கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு  மேற்கொண்ட, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அங்குள்ள கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது,

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வந்தபோது,  கொரோனா வந்தால் இறந்து விடுவோமோ? என்ற அச்சம் இருந்தது. ஆனால் இன்றைக்கு அந்த பயம் மக்களிடம் இல்லை.  இருந்தாலும் மக்களை எல்லாம் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை  பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், கையெடுத்து கும்பிட்ட்டு கோட்டுக்கொண்டிருக்கிறார். தற்போது தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தான் முழு கவனமும் செலுத்தி வருகிறது.

தமிழகத்தில்  கோவாக்சின் தடுப்பூசி 2-வது தவணை செலுத்திக்கொள்ள ஏதுவாக கூடுதல் தடுப்பூசியை  சுகாதார துறையிடும் கேட்டுள்ளோம். விரைவில் அவை கிடைத்துவிடும்.

தற்போது,  கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களை பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் சுற்றிக்கை அனுப்பி இருப்பதாகவும், கொரோனா பணிக்கு வர கட்டாயப்படுத்துவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.  ஆனால், அப்படி ஏதும் இல்லை.  கொரோனா தடுப்பு பணி வர ஆர்வமுள்ள  ஆசிரியர்களை மட்டுமே  பணியில் ஈடுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.

கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை, நிரந்தர ஆசிரியராக நியமனம் செய்வது குறித்து வரும் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும்.,

பிளஸ்-1 வகுப்பில் மாணவர்கள் குரூப் தேர்வு செய்ய பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் தேவை. இதனால் பத்தாம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி் என்ற நிலையில் எப்படி மதிப்பெண் வழங்குவது என்பது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு பிளஸ்-1 சேர்க்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.