கூலி வேலைக்குச் செல்லும் ஆசிரியர்கள்..

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு ,அங்குள்ள  ஆசிரியர்களை நிலை குலையச் செய்துள்ளது.

கை நிறையப் பட்டங்கள் வாங்கி , தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இரண்டு மாதங்களாகச் சம்பளம் கொடுக்கப்படவில்லை.

வயதான பெற்றோர், சின்ன வயதுக் குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்கள் படும்பாடு சொல்லி மாளாத ரகம்.

அங்குள்ள யதாத்ரி- புவனகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் உயர்நிலைப்பள்ளியில் 12 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தவர், சிரஞ்சீவி.

எம்.ஏ., எம்.பில்.மற்றும் பி.எட். ஆகிய மூன்று பட்டங்கள் பெற்றவர்.

 அவரது மனைவி பதமா எம்.பி.ஏ. பட்டம்  பெற்றவர்.

பத்மாவும் தனியார் பள்ளி ஆசிரியை.

ஊரடங்கு காலத்துக்கு முன்பு இருவரும் சுளையாக 60 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வந்தனர்.

ஊரடங்கு அவர்கள் பிழைப்பில் மண்ணை போட்டுவிட்டது.

வேலையும் இல்லை. சம்பளமும் இல்லை.

வயிற்றுப்பாட்டுக்கு என்ன செய்வது?

விவசாய கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். தினமும் 300 ரூபாய் சம்பளம்.

இதே நிலை நீடித்தால் என்னவாகும்?

‘’ நேற்று வரை விவசாயிகள் தற்கொலை சம்பவங்களை நாடு பார்த்தது. இந்த நிலை தொடர்ந்தால் நாளை ஆசிரியர்கள் தற்கொலை செய்தியைப் படிக்கப்போகிறார்கள்’’ என்று வேதனையுடன் சொல்கிறார், சிரஞ்சீவி.

– ஏழுமலை வெங்கடேசன்