ஃபரிட்கோட், பஞ்சாப்

ஞ்சாபில் ஃபரிட்கோட்  மாவட்டக் கல்வி வாரியம் ஆசிரியர்கள் பள்ளி நேரங்களில் மொபைல் உபயோகிக்க தடை விதித்ததால் பல பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்கள் மொபைல் உபயோகிப்பதை ஃபரிட்கோட் மாவட்ட பள்ளிக் கல்வி வாரியம் தடை செய்துள்ளது.   இதை மீறும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதால் அவர்களின் பெயர்களை வாரியத்துக்கு அனுப்ப வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.   இந்த உத்தரவை  அனைத்துப் பள்ளி நிர்வாகிகளும் தங்கள் ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளனர்.

ஆனால் பெரும்பாலான பள்ளிகளில்  பள்ளி நிர்வாகம் மொபைல் மூலமே ஆசிரியர்களுக்கு தகவல்கள் அளித்து வருகின்றன.    தினசரி நிகழ்வுகளான பாடத் திட்டம், மதிய உணவு வழங்குவதில் இருந்து தேர்வு முறைகள் வரை அனைத்து திட்டங்களும் மொபைல் ஆப் மூலமே நிர்வகிக்கப் பட்டு வருகிறது.    இந்த மொபைல் உபயோக தடையினால் பல தகவல்கள் பரிமாற்றம் முடங்கிப் போகலாம் என அச்சம் நிலவுகிறது.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்தே கம்ப்யூட்டர் மற்றும் இண்டர்நெட் வசதி அளிக்கப்பட்டுள்ளது.    ஆனால் பல பள்ளிகளில் இண்டர்நெட் வசதி தடை படுவதாலும் கம்ப்யூட்டர்கள் பழுதடைந்துள்ளதாலும் உடனடியாக எந்த ஒரு தகவலும் பரிமாறிக் கொள்ள முடிவதில்லை.    அதனால் ஆசிரியர்களுக்கு மொபைல் ஆப் மூலம் மட்டுமே நிர்வாகத்துக்கு தகவல் அனுப்பவும்,  தகவல்களைப் பெறவும் முடிகிறது.

இது குறித்து பல பள்ளி நிர்வாகிகள் மாவட்டப் பள்ளி கல்வி வாரியத்துக்கு கடிதம் எழுதி உள்ளனர்.   ஆனால் வாரியம் அதற்கு பதில் அளிக்கவில்லை.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ 200உம்,   உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.300உம்,  பள்ளி முதல்வர்களுக்கு ரூ.500உம் மொபைலுக்கான அலவன்சாக அரசே வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.