சேலம்: மக்களவை தேர்தலையொட்டி, திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று காலை சேலத்தில் வாக்கிங் போதே ஓட்டு வேட்டையாடினார். அப்போது, அங்கிருந்த டீக்கடையில் டீ அருந்தியவர், பெண்கள் மற்றும் பொதுமக்களுடன் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
தமிழகத்தில் முதற்கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே பல மாவட்டங்களில் பிரசாரத்தை முடித்து விட்டு, இன்று சேலத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வ கணபதி மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து இன்று பெத்தநாயக்கன்பாளையத்தில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். முன்னதாக நேற்று மாலை மாலை தருமபுரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்டத்தில் பங்கேற்று விட்டு சேலம் வந்த ஓய்வெடுத்தார்.
இதையடுத்து இன்று காலை சேலம் சின்ன கடைவீதி பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்‘ வழிநெடுகிலும் உள்ள சாலையோர வியாபாரிகளை சந்தித்து திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். அப்போது சாலையில் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் குறைகளையும் கேட்டுச் சென்றார். அப்போது பெண்கள், பொதுமக்கள் என பலர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது, சேலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் டி.எம். செல்வ கணபதி, வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்,