அமைச்சர் சௌத்ரி

டில்லி

ந்திரப் பிரதேசத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது பற்றிய மத்திய அரசின் முடிவை அறிவிக்க வேண்டும் என தெலுங்கு தேசம் கூறி உள்ளது.

ஆந்திரப் பிரதேசம் தங்கள் மாநிலத்துக்கு கூடுதல் நிதி உதவி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.  மத்திய அரசும் ரூ. 1000 கோடி வழங்குவதாக ஒப்புக் கொண்டது.   ஆனால் தற்போது சமர்பிக்கப் பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் அது குறித்து அறிவிப்பு வரவில்லை.   அதனால் தெலுங்கு தேசம் – பாஜக இடையில் மோதல் முற்றி வருகிறது.

நேற்று பாராளுமன்றத்தில் ஆந்திராவின் தெலுங்கு தேசம் மற்றும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.   அதனால்  சபை நடப்பதில் தடங்கல் ஏற்பட்டது.  சபை பல முறை ஒத்தி வைக்கப்பட்டது.    தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த அமைச்சரான ஒய் எஸ் சவுத்ரியுடன் இது குறித்து பிரதமர் மோடி பேசி உள்ளார்.   அவர் இது போன்ற போராட்டங்களை நிறுத்திக் கொல்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அப்போது அவர் சவுத்ரியிடம் ஆந்திரப் பிரதேசத்துக்கு நிதி உதவி அளிப்பது பற்றிய கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.    அதற்கு சவுத்ரி கடந்த 4 வருடங்களாகவே பாஜக அரசு தெலுங்கு தேசம் கட்சியின் கோரிக்கைகளை ”பரிசீலிப்பதையும் கவனிப்பதையும்”  தொடர்ந்து செய்து வருவதாகவும்,   ஆனால் எந்த ஒரு முடிவும் எடுக்கப்பட்வில்லை எனவும் கூறி உள்ளார்.

மேலும் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், “நாங்கள் எங்கள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் இது குறித்து தெளிவாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வருமாறு ஏற்கனவே தெரிவித்து விட்டோம்.    அதைப் பொறுத்து தான் நாங்கள் பாராளுமன்றத்தில் எங்கள் நிலைப்பாட்டை எடுக்க முடியும்.    பாஜகவுடன்  எங்கள் உறவு தொடருமா என்பதை முடிவு செய்வது எங்கள் கையில் இல்லை.   கீழ் மட்டத் தொண்டர்களிடமும் கிராமப்புர தொண்டர்களிடமும் தான் உள்ளது.”  எனக் கூறி உள்ளார்.