சென்னை
இன்று வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்காளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்குகிறது.
வரும் 19 ஆம்தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என 3 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 16 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மொத்தம் சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 39 லட்சத்து 25 ஆயிரத்து 144 வாக்காளர்கள் உள்ளனர்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடசென்னையில் 35 வேட்பாளா்களும், தென் சென்னையில் 41 வேட்பாளர்களும், மத்திய சென்னையில் 31 வேட்பாளர்களும் களம் காணுகின்றனர். வாக்குப்பதிவு எந்திரம் தயார்ப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்களின் சின்னம் மற்றும் பெயர் மட்டுமே பொருத்த முடியும். சென்னையில் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் வாக்குப்பதிவு எந்திரம் கூடுதலாக தேவைப்படுகிறது.
அதாவது மத்திய சென்னையில் 31 வேட்பாளர்கள் என்பதால் 2 வாக்குப்பதிவு எந்திரமும், வடசென்னையில் 35 வேட்பாளர்களும், தென் சென்னையில் 41 வேட்பாளர்களும் இருப்பதால் தலா 3 வாக்குப்பதிவு எந்திரமும் தேவைப்படுகிறது.
சென்னையில் 3 0ஆயிரத்து 726 வாக்குச்சாவடி மையங்கள் 944 அமைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, அதற்கு தேவையான 11 ஆயிரத்து 843 வாக்குப்பதிவு எந்திரங்களும், 4 ஆயிரத்து 469 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 4 ஆயிரத்து 852 வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனைக் கருவிகளும் (வி.வி.பேட்) சென்னை சிந்தாதிரிப்பேட்டை பாதுகாப்பு மையத்தில் இருந்து 16 சட்டமன்றத் தொகுதிகளின் பாதுகாப்பு மையத்திற்குத் தேவைக்கேற்ப ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டது.
வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிட்டபின், வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தக்கூடிய வாக்காளர் பெயர் மற்றும் சின்னம் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளதால் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி இன்று வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது .
தேர்தல் நெருங்கி வருவதால் இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படு வரும் 18 ஆம்தேதி மாலை எந்த வாக்குப்பதிவு எந்திரம் எந்த இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதன் அடிப்படையில் கொண்டு செல்லப்படும். அன்று இரவே வாக்குப்பதிவிற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை தயார்படுத்தி அதன்பின், மறுநாள் அதாவது ஏப்ரல் 19 ம் தேதி காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது