பெங்களூரு: கொரோனா வைரஸ் பிரச்சினையால் பொருளாதாரத்தில் பின்னடைந்தவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால், தற்காலிக ஊழியர்களின் ஊதியங்கள் நிலுவையின்றி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் என்.சந்திரசேகரன்.
தற்போது கொரோனா வைரஸ் பிரச்சினையால், தொழில் நிறுவனங்கள் மூடல், தனிமைப்படுத்துதல் மற்றும் வீட்டிற்குள் முடங்குதல் உள்ளிட்டவைகளால், பொருளாதாரத்தில் பலவீனமாக இருக்கும் சமூகத்தவரே கடுமையாக பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.
எனவே, இந்நிலையில், டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் அறிவித்துள்ளதாவது, “டாடா நிறுவனங்கள் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பலவற்றுடன் இணைந்து பணியாற்றுகின்றன. தற்போது கொரோனா வைரஸ் பிரச்சினையால், சில நடைமுறைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
ஆனாலும், எங்களின் குழும நிறுவனங்கள், தற்காலிகப் பணியாளர்கள் மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு சேர வேண்டிய தொகைய எதையும் நிலுவை வைக்காமல், முழுமையாக தருவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்தகையப் பணியாளர்கள் எங்களின் அலுவலகங்கள் மற்றும் சைட்டுகளில் பணியாற்றுபவர்கள். அரசுகளின் மூடல் அறிவிப்பு மற்றும் தனிப்படுத்தல் காரணமாக, பணி நடவடிக்கைகளில் ஏதேனும் தடங்கல்கள் ஏற்பட்டிருந்தாலும், அவர்களுக்கான ஊதியத்தொகை சரியாக வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.