சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி சென்னையில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயாராணி அறிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த 12,838 வார்டு களுக்கு பிப்ரவரி மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி, டாஸ்மாக் கடைகள் பிப்ரவரி 17 காலை முதல் 19-ம் தேதி இரவு வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பிப்.22-ம் தேதியும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்.19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக பிப்.17-ம் தேதி காலை 10 மணி முதல் பிப்.19-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும், பிப்.22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், அனைத்து டாஸ்மாக் கடைகளும் அதனுடன் இணைந்த பார்கள் மற்றும் எஃப்எல்-6 உரிமம் கொண்ட பார்கள் தவிர, எஃப்எல்-2 முதல் எஃப்எல்-11 வரையிலான உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
மாநிலத்தில் எந்த ஒரு மதுபானத்தையும் விற்பதோ, வெளியில் கொண்டு செல்வதோ கூடாது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பை கடைபிடிக்க தவறும்பட்சத்தில் மதுபான விதிகள்படி தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்க எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.