சென்னை: டாஸ்மாக்கில் நடைபெற்ற ரெய்டில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை, இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராக, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் மேலாளர்கள் சங்கீதா, ராம துரைமுருகன் ஆகியோருக்கு சம்மன் அளித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை 3 நாள் தொடர் சோதனை நடத்தியது. இந்த சோதனை தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், மது பாட்டிலுக்கு 10 முதல் 30 ரூபாய் கூடுதலாக வசூல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் முதல்கட்ட விசாரணையில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்று இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்தது. இது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு கண்டம் தெரிவித்த தமிழ்நாடு அரசு, அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் செந்தில்குமார் அமர்வு அமலாக்கத்துறை நடவடிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இது பேசும்பொருளாக மாறியது. இதையடுத்து, அந்த நீதிபதிகள் வழக்கில் இருந்து விலகிய நிலையில், உயர்நீதிமன்றம் மற்றொரு நீதிபதிகள் அமர்வை நியமித்து விசாரணை நடத்தியது. இதற்கிடையில் தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றம் சென்ற நிலையில், உச்சநீதிமன்றம் வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் உயர்நீதிமன்றத்தையே நாடியது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு தமிழ்நாடு அரசின் மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், அமலாக்கத்துறை விசாரணையை தொடரலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டது
இதைத்தொடர்ந்து டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதேபோல், பொது மேலாளர்கள் சங்கீதா, ராம துரைமுருகன் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதாவது ₹1,000 கோடி மதுபான ஊழல் தொடர்பாக, தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகத்தின் (TASMAC) மூத்த அதிகாரிகளுக்கு அமலாக்க இயக்குநரகம் (ED), நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன் (IAS) மற்றும் பொது மேலாளர்கள் எஸ். சங்கீதா மற்றும் டி. ராமதுரைமுருகன் உள்ளிட்டவர்களுக்கு புதிய சம்மன் அனுப்பியுள்ளது இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.