சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், டாஸ்மாக் ஊழல் விவகாரம் மற்றும் அமலாக்கத்துறை ரெய்டு குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், எதிர்க்கட்சி யான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இன்றைய அமர்வில், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு என்பது போன்ற தகவல்களை அவர் வெளியிடுகிறார். மேலும், வருகிற நிதியாண்டு (2025-26) தமிழ்நாடு அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவைக்கு அளிக்க உள்ளார்.
இந்த நிலையில், இனறு அவை கூடியதும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, டாஸ்மாக் ரெய்டு, மற்றும் அமலாக்கத்துறை கூறியுள்ளபடி ரூ.1000 கோடி ஊழல் குறித்து விவாதிக்க வலியுறுத்தினார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுக்கவே, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.,
முன்னதாக, எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் பட்ஜெட் கூட்டத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.