சென்னை: டாஸ்மாக் வருவாய் வரும் நிதியாண்டில் ரூ. 50 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்றும், நடப்பு நிதியாண்டில், 75 ஆயிரம் கோடி வரை கடன் வாங்க வேண்டி இருக்கும் என்றும், தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 தொடர்பாக பேட்டி அளித்த நிதித்துறை செயலர் முருகானந்தம் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பெண்களுக்கு ரூ.1000 மாத உதவி மற்றும் பல்வேறு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, பேரவை வளாகத்தில் செய்தியளார்களை சந்தித்த நிதித்துறை செயலாளர் முருகானந்தம் பட்ஜெட் மற்றும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியவதாவது,
இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை அரசின் வருவாய் பற்றாக்குறையை தொடர்ந்து குறைத்துக் கொண்டே வருகிறோம். வருவாய் பற்றாக்குறை நிதிநிலையில் பூஜ்ஜியமாக இருக்க வேண்டும் ஆனால் கடந்த 2020-21ஆம் ஆண்டில் உச்சமாக 62 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. 2021-22ஆம் ஆண்டில் 46 ஆயிரத்து 538 கோடியாகயாக குறைந்தது. இந்த ஆண்டில் 30 ஆயிரத்து 476 கோடிக்கு வருவாய் பற்றாக்குறை இருக்கும் என்று கணிக்கிறோம். இது கடந்த ஆண்டை காட்டிலும் மிக நல்ல முன்னேற்றம் என்றார்.
நிதிபற்றாக்குறையை பொறுத்தவரை மாநில ஜிடிபி எண்ணிக்கையில் 3 சதவீதம் இருக்க வேண்டும். 2020-21இல் 4 சதவீதமாகவும், கடந்த ஆண்டில் 3.38 சதவீதமாகவும் இருந்த நிலையில் இந்தாண்டு 3 சதவீதத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த முன்னேற்றம்.
வரவு செலவு திட்டத்தை பொறுத்தவரை திறன் வளர்ப்பு, வேலை வாய்ப்புகளை அதிகரித்தல், தொழில் பயிற்சிகள் வழங்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளிலேயே தொழிற் பயிற்சி வழங்குவதற்கு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
கேள்வி:- மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் எத்தனை பேர் பயன்பெறுவார்கள்?
வரவு செலவு திட்டத்தில் என்ன சொல்லி உள்ளார்களோ அதுதான் எனக்கு தெரியும். அதில் தகுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் தகவல்களை என்னால் வெளியிட முடியாது.
கேள்வி:- 1000 புதிய பேருந்துகள் வாங்குவது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் மீண்டும் வெளியாகி உள்ளதே?
இது புதிய அறிவிப்பு, கடந்த ஆண்டு 1000 பேருந்துகள் வாங்கவும், 500 பேருந்துகளை புதுப்புக்கவும் 500 கோடி ஒதுக்கி இருந்தோம், நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் பேருந்து களை உடனே வாங்க முடியவில்லை. ஆனால் இந்தாண்டு கூடுதலாக 1000 பேருந்துகளை வாங்கவும், 500 புதிய பேருந்துகளை வாங்கவும் நிதி ஒதுக்கி உள்ளோம்.
கேள்வி:- தமிழ்நாடு அரசுக்கு டாஸ்மாக் கிடைக்கும் வருவாய் எவ்வுளவு?
தமிழ்நாடு அரசுக்கு டாஸ்மாக் மூலம் வரும் நிதியாண்டில் 50 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். நடப்பு நிதியாண்டில் 45 ஆயிரம் கோடியும், கடந்த ஆண்டில் 35 ஆயிரம் கோடியும் டாஸ்மாக் மூலம் வருவாய் வந்துள்ளது.
கேள்வி:- தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிலுவை தொகை எவ்வுளவு?
ஜிஎஸ்டி வருவாய் 4,500 கோடி வரவேண்டி உள்ளது. இந்த தொகை வரும் நிதியாண்டில் வரும் என எதிர்ப்பார்க்கிறோம். அது போக உணவுத்துறையில் 4ஆயிரம் கோடி வர வேண்டி உள்ளது.
கேள்வி:- வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது?
வருவாய் பற்றாக்குறையை பொறுத்தவரை நமது வருவாயை உயர்த்துவதற்கு ஜிஎஸ்டி, பத்திரப்பதிவு வருவாயை அதிகப்படுத்தி உள்ளோம். மேலும் பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பையும், பத்திரப்பதிவை 4 சதவீதம் முதல் 2 சதவீதமாக குறைத்துள்ளதன் மூலம் 2 ஆயிரம் கோடி வரை வருவாய் வரும் என எதிர்ப்பார்க்கிறோம். நிர்வாக சீர்த்திருத்தம் மற்றும் செயல்திறனை கூட்டி செலவீனங்களை குறைப்பதன் மூலம் நிதி வருவாயை ஈடுகட்டி வருகிறோம்.
கேள்வி:- பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வுளவு?
பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி மூலம் கிடைக்கும் வருவாய் இந்தாண்டில் 23 ஆயிரத்து 486 கோடியாக உள்ளது. வரப்போகின்ற நிதியாண்டில் 26 ஆயிரத்து 304 கோடி வருவாய் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.
கேள்வி:- தமிழ்நாடு அரசின் கடன் தொகை எவ்வுளவு உள்ளது?
தமிழ்நாடு அரசு வரும் நிதியாண்டில் 84 ஆயிரம் கோடி வரை கடன் பெறலாம் என கடன் அளவை நிர்ணயம் செய்துள்ளனர். 75 ஆயிரம் கோடி வரை கடன் வாங்க வேண்டி இருக்கும். நடப்பு நிதியாண்டில் 72 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளோம். இம்மாத இறுதிக்குள் மேலும் 3 ஆயிரம் கோடி கடன் வாங்க உள்ளோம்.
கேள்வி:- தமிழக அரசின் அதிக வருவாய் வரும் முதல் 3 வரி, வருவாய் மூலங்கள் மற்றும் முதல் மூன்று செலவீனங்கள் என்ன?
ஜிஎஸ்டி, கலால், மதிப்புக்கூடுவரி, பத்திரப்பதிவுகள் மூலம் அதிக வருவாய் தமிழ்நாடு அரசுக்கு கிடைக்கிறது. திட்டம் மற்றும் மானியம், மாத ஊதியம், ஓய்வூதியம், கடன் வட்டி ஆகியவை தமிழ்நாடு அரசின் முதல் மூன்று முக்கிய செலவினங்களாக உள்ளது.
இவ்வாறு நிதித்துறை செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.