சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானம் டெட்ரா பாக்கெட்டுகளில் விற்பனை தொடர்பான வழக்கில், நிபுணர் குழு ஆய்வு அறிக்கை அளிக்க  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுக்கு பெரும் வருமான அளிப்பது டாஸ்மாக் மதுபானம்தான். இதனால், வருமானத்தைப் பெருக்க அரசு பட்டி தொட்டி முதல், மூலை முடுக்கெல்லாம் டாஸ்மாக் மதுபான கடைகளை திறந்து கல்லா கட்டி வருகிறது. இதனால், தமிழக மக்களிடையே குடிப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் மதுபானங்களை குடித்துவிட்டு, குடிமகன்கள் சாலைகளிலும், காடுகளிலும் மது பாட்டில்களை வீசிவிட்டு செல்வதால், மாசு படுவதுடன் கால்நடைகளும் பாதிக்கப்படகின்றன.

இந்த நிலையில், டாஸ்மாக்கில் மதுபானங்களை டெட்ரா பாக்கெட்களில் அடைத்து விற்க மதுபானங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கக்கோரி பிரதாப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து, பாலித்தின், அலுமினியம், காகிதம் ஆகியவற்றின் கலவையால் உருவாக்கப்படும் டெட்ரா அட்டையில் மதுபானத்தை அடைத்தால் உடல் நலக்குறைவை ஏற்படுத்தும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது மேலும் டெட்ரா அட்டையை மறுசுழற்சி செய்வதற்கான மையங்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் வாதிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டெட்ரா பாக்கெட்களில் மதுபானம் விற்பதால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இக்குழு இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்று டாஸ்மாக் நிறுவனம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிமன்றம், விரைவில் நிபுணர்குழு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.