சென்னை: தீபாவளியையொட்டி டாஸ்மாக் மதுபானம் ரூ.431 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.30 கோடி குறைவு என குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் 6ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுக்கடைகள் மதுவிற்பனையை செய்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்திலும், சில நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைப்புக்கு பிறகு மீண்டும் விற்பனை செய்து கல்லா கட்டி வருகிறது. தற்போது டாஸ்மாக் பார்களும் திறக்கப்பட்டு முழுமையான விற்பனை கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தீபாவளியையொட்டி கடந்த 2 நாட்களில் மட்டும் 431.03கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட குறைவு என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சாதாரணமாக ஒரு நாளில் விற்பனை செய்யப்படும் மதுவானது குறைந்த பட்சம் 60 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும். விசேஷ நாட்களில் மதுவின் விற்பனை 100 கோடிக்குமேல் தாண்டும். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மது விற்பனை இன்னும் அமோகமாக இருக்கும்.
இந்த நிலையில், தற்போது தீபாவளியையொட்டி 2 நாட்களில் 431.03 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாள் (3ந்தேதி) ரூ.205.61 கோடிக்கு மது விற்பனை யான நிலையில், நேற்று (தீபாவளியன்று) ரூ.225.42 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட (2020 கொரோனா காலம்) ரூ.30 கோடி குறைவு என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பொதுமுடக்ககம் காரணமாக மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக இருந்த நிலையிலும், அப்போதையஅரசு மதுக்கடைகளை திறந்து வைத்துக் கொண்டு, மக்களுக்கு அரசு வழங்கிய மானியங்களையும், மானிய உதவிகளையும் பிடுங்கி வந்த நிலையில், தற்போது அதனுடன் அரசு ஒப்பிட்டு, மது விற்பனை குறைவு என கூறுவது அபத்தமானது.