சென்னை
இந்த வருடம் தீபாவளி பண்டிகை சமயத்தில் சென்ற வருடத்தை விட குறைவாக மது விற்பனை ஆகி உள்ளது
தினம் ஒரு தீபாவளி என்னும் நிலையில் டாஸ்மாக் கடைகளில் மாலைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதுவும் தீபாவளி பண்டிகை என்றால் மதுக்கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலை மோதுவது வழக்கம். இந்த வருட விற்பனை பற்றி டாஸ்மாக் நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
அவர், “தீபாவளிக்கு முதல்நாளானா 17ஆம் தேதி ரூ.113 கோடிக்கும், தீபாவளி நாளான 18ஆம் தேதியன்று ரூ.131 கோடிக்கும் மது விற்பனை ஆகி உள்ளது. மொத்த விற்பனை ரூ.244 கோடி ஆகும். கடந்த ஆண்டு விற்பனையோடு ஒப்பிடும் போது இந்த ஆண்டு விற்பனை சுமார் 6.4% அளவுக்கு குறைந்துள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் விற்பனை ஆகும் என எதிர்பார்த்தது ஏமாற்றத்தில் முடிந்துள்ளது” எனக் கூறி உள்ளார்.
இது குறித்து மது அருந்துவோர் சிலர், “தீபாவளி என்றாலே மதுப் பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான். ஆனால் தற்போதைய விலை உயர்வு, மற்றும் டெங்கு பாதிப்பு எங்களுக்கு ஒரு அச்சத்தை உண்டாக்கி உள்ளது. இதனால் மது விற்பனை குறைந்திருக்கும்” என தெரிவித்தனர். விற்பனைக் குறைவு அரசுக்கு அதிர்ச்சி அளித்தாலும் தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாக இல்லத்தரசிகள் தெரிவிக்கின்றனர்.